சுடச்சுட

  

  420 ஏக்கர் பாசனத்துக்கு கை கொடுக்கும் தடுப்பணைகள்!

  By கடலூர்  |   Published on : 06th December 2014 03:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக அரசின் திட்டமான மழைநீர் சேகரிப்புத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தடுப்பணைகள் நிரம்பியுள்ளதால் 420 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவதோடு, மழைநீர் வீணாகக் கடலில் கலப்பது தடுக்கப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் பருவமழைக் காலங்களில் பெய்யும் மழைநீர் தேக்கி வைக்கப்படாமல் கடலில் கலந்து வீணாகிறது. இதனைத்

  தடுக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடும் வகையிலும் தமிழக அரசு மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை கொண்டு வந்தது. ஒவ்வொரு வீடு, அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு மழைநீர் சேகரிக்க வழிவகை செய்யப்பட்டது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் கடலூர் மாவட்ட பொதுப்பணித் துறையின் நிலநீர் கோட்டம், மழைநீர் சேகரிப்பு பெரும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மழைக் காலங்களில் ஆறுகளில் வீணாகச்சென்று பின்னர் கடலில் கலந்திடும் மழைநீரை சேகரிக்க குறு, சிறு ஓடைகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி சேகரிக்க திட்டமிடப்பட்டது.

  இதற்காக மாவட்டத்தில் 8 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு முதல்கட்டமாக 2012-13ஆம் ஆண்டில் குள்ளஞ்சாவடி அருகே உள்ள கருப்பஞ்சாவடியில் வடக்கு ஓடையின் குறுக்கே சுமார் ரூ.24.29 லட்சத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. அதேப்போன்று 2013-14ஆம் ஆண்டில் சுமார் ரூ.42 லட்சத்தில் பண்ருட்டி அருகே சாத்திப்பட்டு கிராமத்தில் நாலோடையின் குறுக்கே 40 மீட்டர் நீளத்தில் தடுப்பணை கட்டி முடிக்கப்பட்டது.

  இந்த தடுப்பணைகள் தற்போது பெய்த கனமழையால் நிரம்பி வழிகின்றன. இதனால், விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  இந்த தடுப்பணைகள் நிரம்பியுள்ளதால் தங்கள் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.கருப்பஞ்சாவடி தடுப்பணையானது 23 மீட்டர் நீளமும், 1.20 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த அணை தற்போது நிரம்பியுள்ளதால் இப்பகுதியில் சுமார் 160 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுள்ளது.

  இதேப்போன்று, சாத்திப்பட்டு கிராமத்தில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையால் சுமார் 260 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்றுள்ளது. இந்த அணையினால் மழைக்காலங்களில் மழைநீர் கெடிலம் ஆற்றில் கலந்து வீணாகக் கடலுக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து கடலூர் பொதுப்பணித் துறை நிலநீர் கோட்டத்தின் செயற்பொறியாளர் ஆர்.ரவிச்சந்திரன் கூறுகையில், கடலூர் கோட்டத்துக்கு உள்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் நிலநீர் திட்டத்தில் 13 ஏரிகளில் தலா ஒரு மழைநீர் சேகரிப்பு கிணறு ரூ.40 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிணறுகள் ஏரிக்கு மழைநீர் வரும் காலங்களில் நிரம்புவதோடு, ஏரியில் தண்ணீர் இல்லாத நேரத்தில் கிணற்றிலுள்ள நீரை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

  கடலூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தின் கீழ் பண்ருட்டி, திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதி கிடைக்கும்பட்சத்தில் கூடுதலாக தடுப்பணைகள் கட்டி மழைநீர் சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். உதவி செயற்பொறியாளர் டி.சுதாகர் உடனிருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai