சுடச்சுட

    

    கடலூர் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை சாவு

    By கடலூர்,  |   Published on : 07th December 2014 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் அரசு மருத்துவமனையில், பச்சிளம் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது. இதனைக் கண்டித்து குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடலூர் அருகே உள்ள கோண்டூர் காலனியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் புகழ்வாணி (29). தலைப் பிரசவத்துக்காக, நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள திருவழந்தூரிலிருந்து தாய் வீடு வந்திருந்த இவர், கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு கடந்த நவம்பர் 19ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. 8 நாள்கள் மருத்துவமனையில் இருந்த புகழ்வாணி பின்னர் வீடு திரும்பினார்.

    சனிக்கிழமை காலை, குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனைக்கு குழந்தையை புகழ்வாணி அழைத்துச் சென்றார். அங்கு சிசு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போது குழந்தை இறந்ததாகத் தெரிய வந்தது.

    ஆனால், குழந்தையை மருத்துவமனையில் சேர்த்த போது உயிருடன் இருந்ததாகவும், மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்காததால் தான் குழந்தை இறந்ததாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

    அலட்சியமாக நடந்து கொண்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மருத்துவமனை நிர்வாகத்தைக் கண்டித்தும் உறவினர்கள் தர்னாவில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியினரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

    இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த கடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் மு.ராமமூர்த்தி பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஆட்சியரிடம் இது குறித்து எடுத்துக் கூறி, உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்ததன் பேரில், அவர்கள் கலைந்து சென்றனர். தகவலறிந்த திமுக மாணவரணி மாநிலச் செயலர் இள.புகழேந்தி, நகரச் செயலர் ராஜா ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று விசாரித்தனர்.

    இது குறித்து மாவட்ட நலப் பணிகள் மற்றும் குடும்ப நல இணை இயக்குநர் ச.வித்யாசங்கர் கூறியது: குழந்தை பிறக்கும் போது 1.800 கிலோ கிராம் எடை மட்டுமே இருந்தது. மேலும் குறைப் பிரசவமாகும். பொதுவாக குறைவான எடையுள்ள குழந்தைகளுக்கு சுவாசப் பிரச்னை ஏற்படும்.

    அதன்படி, இக் குழந்தைக்கு காலையில் புரை ஏறி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. புறநோயாளிகள் பிரிவில் பரிசோதிக்கப்பட்டு உடனடியாக சிசு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு பரிசோதித்த போது குழந்தை இறந்தது தெரிய வந்தது. புரை ஏறி மூச்சுத் திணறல் ஏற்பட்டது தான் இறப்புக்கு காரணம் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai