சுடச்சுட

  

  சிதம்பரத்தில் தெரு நாய்த் தொல்லை அதிகரிப்பு

  By சிதம்பரம்  |   Published on : 07th December 2014 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிதம்பரம் நகரில் அதிகரித்து வரும் நாய்த் தொல்லையால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நகர்மன்ற உறுப்பினரை நாய் கடித்தும் கூட நாய்த் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை என புகார் எழுந்துள்ளது.

  தெரு நாய்களை பிடிப்பதற்காக வாங்கப்பட்ட வாகனமும் எவ்வித செயல்பாடுமின்றி நகராட்சி வளாகத்தில் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக முடங்கிக் கிடக்கிறது.

  சிதம்பரம் நகராட்சிப் பகுதியில் அண்மைக் காலமாக, தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது.

  நகராட்சிப் பகுதியில் 2000 தெரு நாய்கள் உள்ளதாக ஏற்கெனவே எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. தெருக்களில் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரியும் இந்த நாய்களால் மக்கள் கடும் அச்சத்துக்கும், இன்னலுக்கும் உள்ளாகின்றனர்.

  குறிப்பாக காலை வேளையில் டியூஷனுக்குச் செல்லும் மாணவர்களும், பெண்களும், இரவு நேரங்களில் பணி முடிந்து மிதி வண்டியில் வீட்டுக்குத் திரும்புவோரும் பாதிப்புக்குள்ளாகிறனர். நாய்க்கடிக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

  நாய்த் தொல்லை குறித்து, மக்கள் புகார் கூறியும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தபாடில்லை. கடந்த வாரம் கூட நகர்மன்ற உறுப்பினர் எல்.சீனுவாசனை தெரு நாய் கடித்துள்ளது. அதன்பிறகும் நாய்த் தொல்லையை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கையில் இறங்கவில்லை.

  நாய்களை பிடிப்பதற்காக ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் செலவில் வாங்கப்பட்ட வாகனம் நகராட்சி வளாகத்திலேயே கேட்பாரின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், வாகன எண் பலகையை காரணம் காட்டி பல மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த நாய் பிடிக்கும் வாகனம், தற்போது எண் பெற்ற பிறகும் பேட்டரி பழுதை காரணம் காட்டி கடந்த 8 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சில ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பேட்டரியை காரணம் காட்டி பயன்பாடற்று நிற்கும் இந்த வாகனம் மேலும் சில மாதங்கள் இயக்காமலேயே இருந்தால் இனி எப்போதும் பயன்படுத்தவே முடியாத படி பாழாகும் நிலை ஏற்பட்டு விடும்.

  மேலும் நகராட்சி அதிகாரிகளின் அலட்சியத்தால், நாய் கருத்தடையும் செய்யப்படவில்லை. எனவே, இனியாவது நகராட்சி நிர்வாகம் வாகனத்தை பயன்படுத்தி நாய்களை பிடித்து கருத்தடை செய்ய வேண்டும் என உத்தரவிட வேண்டும் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai