சுடச்சுட

    

    புதை சாக்கடை திட்டப்பணி: விரைந்து முடிக்க உத்தரவு

    By கடலூர்  |   Published on : 07th December 2014 03:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் நகராட்சியில் ரூ.64.14 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் எம்.சி.சம்பத் உத்தரவிட்டார்.

    கடலூர் நகராட்சியில் நடைபெற்று வரும் புதை சாக்கடைத் திட்டப் பணி, மீன் அங்காடி, எரிவாயு தகன மேடை, குடிநீர் திட்டப் பணிகள் உள்ளிட்ட நலத் திட்டப் பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது: கடலூர் நகராட்சியில் ரூ.65 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் புதை சாக்கடைத் திட்டப் பணி நடைபெற்று வருகிறது.

    இதுவரையில் இத் திட்டத்தின் கீழ் 5,072 ஆள் நுழைக் குழிகள், 1,57,419 மீட்டர் கழிவுநீர்க் குழாய்கள்,16,000 கழிவுநீர் வீட்டு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

    கழிவு நீரேற்று நிலையங்கள் 7-ம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும், தேவனாம்பட்டினத்தில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் அகற்றும் நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

    இது தவிர கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரினை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மீன்வளத் துறை அனுமதியுடன் கெடிலம் ஆற்று கடைமடை பகுதியில் விடவும் அனுமதி பெற்று 99 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இத் திட்டம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

    மேலும், ஹைதராபாத், தேசிய மீன் வளர்ச்சிக் கழக நிதியுதவியுடன் கடலூர் நகராட்சியில் மஞ்சக்குப்பம் அண்ணா மீன் அங்காடி, தேவனாம்பட்டினம் மீன் அங்காடி மற்றும் திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மீன் அங்காடி ரூ.1.99 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.1.46 கோடி மானியமாகவும், ரூ.52.75 லட்சம் நகராட்சி நிதியிலிருந்தும் செலவிடப்படுகிறது.

    மீன் அங்காடியில் ஏல அரங்கு, விற்பனை வளாகம், மீன்களை சுத்தம் செய்யும் பகுதி, விற்பனை செய்யும் கடைகள், மீன்களை பாதுகாக்கும் அறை, கழிவறைகள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நிறைவடைந்தவுடன் மீன் அங்காடி செயல்படத் தொடங்கும் என்றார்.

    அதேபோன்று, புதிய மாவட்ட ஆட்சியரகம் அருகே அமைக்கப்பட்டு வரும் துணை மின் நிலையம், கம்மியம்பேட்டையில் ரூ.7.30 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் எரிவாயுத் தகன மேடை ஆகியவை விரைவில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அமைச்சர்.

    முன்னதாக கடலூர் அரசு பொது மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமிராவை இயக்கி வைத்தார்.

    இந்த ஆய்வுகளின் போது ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார், கடலூர் நகர்மன்றத் தலைவர் ஆர்.குமரன், கோட்டாட்சியர் மோ.ஷர்மிளா, நகராட்சி ஆணையர் முருகேசன், இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) ச.வித்யாசங்கர், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் ப.பால்ராஜ், உதவி நிர்வாகப் பொறியாளர் பா.பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai