Enable Javscript for better performance
அடிப்படை வசதி கோரும் கிராம மக்கள்- Dinamani

சுடச்சுட

    

    திட்டக்குடி அருகேயுள்ள கூடலூர் கிராம மக்கள் தங்களது கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் வேண்டி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்துள்ளது கூடலூர் கிராமம். 9 வார்டுகள் கொண்ட இக்கிராமத்தில் சுமார் ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இக்கிராமம் திட்டக்குடி- கடலூர் மாநில நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளது.

    இக்கிராமத்தைச் சேர்ந்த சுமார் 60 குடும்பத்தினருக்கு தமிழக அரசு கடந்த 1994-ம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கியது. ஆனால், சுமார் 20 ஆண்டுகள் ஆகியும் இப்பகுதிக்குத் தேவையான குடிநீர், தெருவிளக்குகள், சாலை வசதி செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது.

    மேலும், பட்டா வழங்கப்பட்ட இடத்துக்குச் செல்வதற்கு பாதை வசதி இல்லாததால், தனியார் இடத்தின் வழியாகத் தான் செல்ல வேண்டியுள்ளது. பாதை அமைக்கப்படாததால், தெருவிளக்கு வசதி செய்யப்படவில்லை. நோயாளிகளை அழைத்துச் செல்வதிலும் சிரமம் உள்ளது. மாணவ, மாணவிகள் இரவு நேரங்களில் வீடு திரும்புவதற்கு மிகுந்த கஷ்டங்களை சந்திக்கின்றனர்.

    மேலும், இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். ஆண்கள், பெண்களுக்கென தனியாக கழிப்பிட வசதி இல்லாததால் சாலையோரங்களை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதனால் கிராமத்தில் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.

    வடிகால் வசதி இல்லாததால் சமீபத்தில் பெய்த மழையினால், சாக்கடைக் கழிவுநீர் வீடுகளின் அருகில் தேங்கி தொற்றுநோய் பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து அப்பகுதியினர் கூறுகையில், இப்பகுதியில் இலவச மனைப் பட்டா வழங்கிய நாள் முதல் அடிப்படை வசதி கோரி சுமார் 20 ஆண்டுகளாக மாவட்ட நிர்வாகத்திடமும், ஊராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை மனுக்கள் அளித்தும் பயன் இல்லை. கிராமத்தில் யாரேனும் இறந்து விட்டால் இறந்தவரின் உடலை வெளியில் எடுத்துச்செல்ல கூட பாதை இல்லை. எனவே, எங்களது பகுதியில் அடிப்படை வசதி செய்து தர வேண்டுமென கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai