சுடச்சுட

  

  ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்காததால் மறியல்

  By  கடலூர்,  |   Published on : 10th December 2014 11:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் அருகே ஆதார் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   கடலூர் மாவட்டத்தில் ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கும் பணி வட்டாட்சியர் அலுவலகம், நகராட்சி அலுவலகங்களில் அறை ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது.
   கடலூர் வட்டத்தில் தோட்டப்பட்டு, நத்தப்பட்டு, வெள்ளப்பாக்கம், குமாரபுரம் ஆகிய ஊராட்சிகளில் விடுபட்டவர்களுக்கான புகைப்படம் எடுக்கும் பணி கடலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
   இதையடுத்து, இக்கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள் புகைப்படம் எடுப்பதற்காக காலை சுமார் 7.30 மணி முதல் குவிந்தனர். ஆனால், காலை 11 மணி வரையும் புகைப்படம் எடுப்பதற்கான பணிகள் தொடங்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
   அப்போது, அங்கு வந்த கடலூர் புதுநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமாரதேவன் மறியலில் ஈடுபட்டவர்களை கடிந்து பேசியுள்ளார். இதை அங்கிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் தட்டிக்கேட்ட போது அவரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைக் கண்டித்து பொதுமக்கள் குரல் எழுப்பினர். இதனால், அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது.
   இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆதார் அடையாள அட்டைக்கு செவ்வாய்க்கிழமை புகைப்படம் எடுக்கப்படும் என்று கூறியதால், காலையிலேயே வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து விட்டோம். மாணவர்களை பள்ளியில் இருந்து ஒரு மணி நேரம் அனுமதியோடு அழைத்து வந்தோம். ஆனால், புகைப்படம் எடுக்கப்படும் அறை பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட போது போலீஸார் நடந்து கொண்ட விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றனர்.
   இதைத் தொடர்ந்து காலை சுமார் 11.45 மணியளவில் புகைப்படம் எடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இப்பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai