சுடச்சுட

    

    பயிருக்கு யூரியா அதிகமிடுவதால்  நோய்கள் தாக்க வாய்ப்பு:  வேளாண் அதிகாரி எச்சரிக்கை

    By  கடலூர்,  |   Published on : 10th December 2014 11:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பயிர்களில் தழைச்சத்து (யூரியா) அதிகமாக இடுவதால் நோய்கள் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளதாக மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் த. தனசேகரன் தெரிவித்துள்ளார்.
     இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் நிகழ் சம்பா பருவத்தில் சுமார் 2.50 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்பொழுது மழைவிட்டு மேகமூட்டத்துடன் கூடிய காலநிலையில் நெற்பயிரில் பூச்சிநோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. மிக முக்கியமாக பச்சை தத்துப்பூச்சி மற்றும் புகையான் பூச்சி தாக்க அதிக வாய்ப்பு உள்ளது.
     மேலும், அதிகப்படியான தழைச்சத்து தரவல்ல
     யூரியா) உரத்தை பரிந்துரைக்கு மேல் இடுவதால் இப்பூச்சித் தாக்குதல் அதிகமாகி பால் பிடிக்கும் முன்னரே பயிர் காய்ந்து விடுவதும், கதிர்கள் பதராகி விடவும் வாய்ப்புள்ளது.
     புகையான் பூச்சி என்பது சாம்பல் நிறத்தில் காணப்படும் சிறிய தத்துப் பூச்சியாகும். முழு வளர்ச்சி அடைந்த பூச்சிகளும், குஞ்சுகளும் பயிரின் தூர்களின் அடிப்பாகத்தில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சும். இதனால், இலைகள் மஞ்சளாக மாறியும், பயிரின் அடிப்பகுதி அழுகி பயிர் கீழே சாய்ந்தும், பயிர்கள் பழுப்பு நிறமாக புகைந்தது போலவும் காணப்படும். மேலும், வயலில் புகையான் தாக்குதலுக்கான பகுதியிலுள்ள பயிர்கள் திட்டுத் திட்டாக காய்ந்து காணப்படும்.
     இதனை கட்டுப்படுத்த வயலில் உள்ள நீரை உடனடியாக வடித்து விடல் வேண்டும். புகையானால் தாக்கப்பட்ட வயலில் தழைச்சத்து (யூரியா) இடுவதை தாமதப்படுத்தி, மண் பரிசோதனை அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட அளவு மேலுரமாக யூரியாவை பிரித்து இட வேண்டும்.
     வயல் வரப்புகள் களைகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பதோடு, வயலில் 4 அடி பட்டங்களாக பயிரை விலக்கி சூரிய ஒளி, காற்று நன்கு படும்படி வைக்க வேண்டும். விளக்குப்பொறி வைத்து தாய் அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
     மிக முக்கியமாக குயினைல்பாஸ் (எக்காலக்ஸ்) பென்தியான் (லெபாசிட்) மிதைல் பாரத்தியான் (மெட்டாசிட் 50) மற்றும் சிந்தடிக் பைரித்ராய்டு மருந்துகளான சிம்புஷ், பென்வலரேட் போன்ற பூச்சி மருந்துகள் தெளிப்பதை கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.
     புகையான் பூச்சியின் தாக்குதல் பொருளாதாரச் சேத நிலைக்கு மேல் தென்பட்டால் அதாவது தூர்களில் அதிகமான அளவுக்கு புகையான் பூச்சிகள் தென்பட்டால் ஒரு ஏக்கருக்கு மானேகுரோட்டோபராஸ் 500 மிலி அல்லது இமிடாகுளோப்ரிட் 100 மிலி அல்லது அசிபேட் 75 எஸ்பி 250 கிராம் அல்லது கார்பரில் 10 கிலோ அல்லது வேப்பங்கொட்டை சாறு 10 கிலோவை பயிரின் அடிப் பகுதியில் நன்கு படுமாறு தெளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai