சுடச்சுட

  

  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழு என்ற நாக் கமிட்டி ஏ கிரேடு அந்தஸ்து வழங்கியுள்ளது.

  கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரால் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1929-ல் தொடங்கப்பட்டது. இப் பல்கலைக்கழகம்

  தற்போது 85 ஆண்டுகளைக் கடந்து, ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 9 புலங்கள், 50 துறைகளுடன் இயங்கி வருகிறது. 1979-ம் ஆண்டு தொலைதூரக் கல்வி சேவையை தொடங்கி நடத்தி வருகிறது.

  நிதி நெருக்கடி மற்றும் பல்வேறு முறைகேடுகள் காரணமாக பல்கலைக்கழகத்தை தமிழக அரசு ஏற்று, அதன் நிர்வாகியாக முதன்மைச் செயலாளரான ஷிவ்தாஸ்மீனா நியமிக்கப்பட்டார். தற்போது பல்வேறு நிதி, நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு, இயங்கி வருகிறது.

  அரசு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நன்கொடை இன்றி, தகுதி அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளாக பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.

  ஏ கிரேடு அந்தஸ்து: இந்நிலையில், பல்கலைக்கழகத்துக்கு தர மதிப்பீடு வழங்குவதற்காக முன்னாள் துணைவேந்தர் எஸ்.சந்திரசேகர் ஷெட்டி தலைமையிலான 13 பேர் கொண்ட தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக் குழு கடந்த நவம்பர் மாதம் பல்கலை.க்கு வந்தது. இக்குழு அனைத்துத் துறைகளையும் ஆய்வு செய்துவிட்டுச் சென்றது.

  இதையடுத்து, ஆய்வு மேற்கொண்ட நாக் கமிட்டி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு ஏ கிரேடு அங்கீகாரம் வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  இதனால் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  தேசிய அளவில் சிறப்பிடம்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தற்போது பல்வேறு துறைகளில் குறிப்பாக கடல்வாழ் உயராய்வு மையம், மொழிப்புல உயராய்வு

  மையம் மற்றும் மருத்துவம், பொறியியல், வேளாண், கல்வி, உடற்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பெருமளவு மாற்றமும், வளர்ச்சியும் அடைந்துள்ளது.

  ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடுவதில் தேசிய அளவில் முதல் 20 பல்கலைக்கழகங்களில், அண்ணாமலைப் பல்கலையும் ஒன்றாகத் திகழ்கிறது. இந்திய பல்கலைக்கழகங்களில் முதல் 10 இடங்களுக்குள் அண்ணாமலைப் பல்கலை. இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai