சுடச்சுட

  

  பண்ணைக்குட்டை அமைத்து அதன் மூலமாக மீன் வளர்ப்பு பணியில் ஈடுபடும் விவசாயியை ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வியாழக்கிழமை சந்தித்து பாராட்டினார்.

  கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம், பண்ருட்டி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப்பணிகளை ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் வியாழக்கிழமை ஆய்வு செய்தார். அண்ணாகிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் சித்தரசூர் ஊராட்சியில் நடவுதுவரை, உளுந்து விதைப்பண்ணைகளை ஆய்வு செய்தார். அப்போது, மானாவாரி விதைப்பு முறையில் துவரை, உளுந்து பயிரிடுவதை விட நடவு முறையில் பயிரிடும் போது 2 மடங்கு மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

  இதனைத் தொடர்ந்து, கீழ்கவரப்பட்டில் ரூ.2 கோடியில் கட்டப்பட்டு வரும் அண்ணாகிராம ஒன்றிய அலுவலக பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிக்க ஆட்சியர் அறிவுறுத்தினார்.

  பின்னர், புலவனூரில் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் கட்டப்பட்டு வரும் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள், தானே திட்ட குடியிருப்புகள், இந்திரா நினைவு குடியிருப்புகளை ஆய்வு செய்தார்.

  தொடர்ந்து பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் பூங்குணம் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் மூலமாக சூரக்குப்பம் சாலையில் ரூ.66 ஆயிரத்தில் 560 மரக்கன்றுகள் நடுதல், வேலி அமைக்கும் பணியை பார்வையிட்டார்.

  இத்திட்டத்தின் கீழ் லட்சுமிநாராயணபுரம் ஊராட்சி கந்தன்பாளையம் கிராமத்தில் ரா.கதிர்வேல் என்பவரது நிலத்தில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டது. இந்த பண்ணைக்குட்டையில் அவர் மீன் வளர்த்து வருகிறார். இப்பணியை ஆட்சியர் பார்வையிட்டு அவரை பாராட்டினார்.

  இதுகுறித்து விவசாயி ரா.கதிர்வேல் கூறுகையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டது. இதில், கெண்டை, கட்லா, ரோகு, விரால் ஆகிய மீன்களை வளர்த்து வந்தேன். 3 மாதத்திற்கு பின்னர் மீன்களை பிடித்து விற்பனை செய்கிறோம். ஒவ்வொரு முறையும் 500 கிலோ வரையில் மீன் பிடிக்கிறோம். இதனால் நல்ல லாபம் கிடைத்து வருவதோடு, மீன்களுக்கு நல்ல வரவேற்பும் உள்ளது என்றார்.

  இந்த பண்ணைக்குட்டை அமைப்பதற்கு ரூ.57 ஆயிரம் செலவானதாகவும், இத்திட்டத்தின் கீழ் மேலும் பல குட்டைகள் அமைக்கப்பட்டு விவசாயிகளை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென ஆட்சியர் கூறினார்.

  பின்னர், அண்ணாகிராமம் ஒன்றியம் சின்னப்பேட்டை ஊராட்சியில் சொட்டுநீர் பாசனம் மூலமாக சாமந்திப்பூ, மிளகாய் விவசாயத்தை ஆட்சியர் பார்வையிட்டார்.

  இந்த ஆய்வின் போது ஊரகவளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் மகேந்திரன், பொறியாளர் பிரபாகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.கதிரவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai