சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் ஊரக வேலைத்திட்ட பணியாளர்களுக்கு மாற்றுப்பணி வழங்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

  கடலூர் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பிரதிநிதிகளுக்கான சமூக தணிக்கை பயிற்சி முகாம் கடலூர் நகர அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  பயிற்சி முகாமை தொடங்கி வைத்து ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் பேசியதாவது:

  ஊரக ஏழை மக்களின் வறுமையை போக்குவதுடன், பொருளாதார மேம்பாடு அடையவும், ஊரக பகுதிகளிலிருந்து நகர் புறத்துக்கு வேலைக்காக இடம்பெயர்தலை தடுக்கவும், கிராம உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கவும் ஏற்படுத்தப்பட்டதுதான் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்.

  இத்திட்டத்தின் மூலம் ஊரக பகுதிகளிலுள்ள ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு 100 நாள்களுக்கான வேலை உறுதி செய்யப்படுகிறது. பொதுச் சொத்துகளை உருவாக்குவதில் மட்டுமே இதுவரை முக்கியத்துவம் தரப்பட்டு வந்த இத்திட்டம், வரும் நிதியாண்டிலிருந்து தனிநபர் சொத்துக்களாக பண்ணை குட்டை அமைத்தல், அரசால் வழங்கப்பட்ட விலையில்லா ஆடுகள், மாடுகளுக்கான கொட்டகைகள் அமைத்தல், கோழி கொட்டகைகள் அமைத்தல், தனி நபர் நிலம் மேம்பாடு செய்தல், தனியார் நிலத்தில் மரக்கன்றுகள் நடுதல், பசுமை வீடு, இந்திரா நினைவு குடியிருப்பு வீடு ஆகியவை முக்கிய காரணிகளாக தேர்வு செய்யப்பட்டு இவற்றில் 90 நாள்களுக்கு வேலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

  இத்திட்டத்தின் மிகச் சிறப்பு வாய்ந்த தன்மை, திட்டத்தை மக்களே தணிக்கை செய்வதாகும். வழக்கமாக நடைபெறும் தணிக்கையில், தணிக்கை செய்பவர் அரசு அலுவலராக இருப்பார். ஆனால் சமூக தணிக்கை என்பது மக்களின் பங்கேற்புடன் மக்களே தணிக்கை செய்வதாகும். அலுவலர்கள் இதற்கு துணை புரிவதுடன் அவர்களுடைய கடமை முடிகிறது.

  சமூக தணிக்கை கிராம வாரியாக ஒவ்வொரு கிராமத்துக்கும் 6 நாள்கள் நடைபெறும். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அல்லது அவரால் நியமிக்கப்படும் பிரதிநிதி கலந்து கொள்வார் என்றார் எஸ்.சுரேஷ்குமார்.

  இப்பயிற்சி வகுப்பில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் இயக்குநர் ஜி.ராஜம், திட்ட இயக்குநர் மகேந்திரன், மாவட்ட, ஊராட்சி

  ஒன்றியக்குழு, தலைவர்கள், மாவட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai