சுடச்சுட

    

    கடலூரில் தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தி மோட்டார் இயந்திரத்தை பயன்படுத்தி, லாபகரமான முறையில் விவசாயி ஒருவர் விவசாயம் செய்து வருகிறார்.

    மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் ஆழ்துளை கிணற்று நீரையே விவசாயத்துக்கு பெரிதும் நம்பி உள்ளனர். ஆழ்துளை கிணறு அமைத்து அதிலிருந்து உறிஞ்சப்படும் நீரை வெளியேற்ற மின்சக்தி பயன்படுகிறது. ஆனால், மின்தடை மற்றும் கூடுதல் செலவு காரணமாக, விவசாயிகள் பெரும்பாலும் நஷ்டத்தையே சந்தித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக அரசு விவசாயிகளுக்காக புதிய சூரிய மின்சக்தி கொள்கையை அறிவித்துள்ளது. அதன்படி விவசாயத்துக்கு நீர் இறைக்க 80 சதவீம் மானியம் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தொரப்பாடி கிராமத்தில், ந.ரவி என்ற விவசாயி சூரிய மின்சக்தி மூலமாக நீர் இறைக்கும் மோட்டார் இயந்திரத்தை நிறுவியுள்ளார். இதைக்கொண்டு பூசணி, நெல் மற்றும் காய்கறிகளை விவசாயம் செய்து வருகிறார்.

    இதற்காக தனது விவசாய நிலத்தின் ஒரு பகுதியில் 240 வோல்ட் திறன் கொண்ட 20 சூரிய தகடுகள் அமைத்து, சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்கிறார். அதன் மூலமாக மின்மோட்டாரை இயக்கி விவசாயப் பணிகளுக்காக பயன்படுத்துகிறார். இந்த மின் தகடுகள் சூரியனின் ஓட்டத்திற்கே நகரும் திறன் கொண்டவை. இதனால் சூரிய சக்தி பூமியில் விழும் வரையில் அதிலிருந்து மின்சக்தியைப் பெறும் ஆற்றல் கொண்டவை.

    இதுகுறித்து விவசாயி ந.ரவி கூறியதாவது:

    தற்போது அமைக்கப்பட்டுள்ள சூரிய மின்சக்தி மூலமாக ஒன்றரை ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறேன். இந்த சக்தியை பயன்படுத்தி 5 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியும். 30 அடியிலிருந்து 150 அடி வரையில் தண்ணீர் எடுக்க முடியும். கடந்த காலங்களில் ஆயில் என்ஜின் மூலமாக தண்ணீர் பாய்ச்ச மாதம் ரூ.2 ஆயிரம் வரையில் செலவு செய்தேன். தற்போது, இச்செலவு மிச்சமாகி நல்ல வருமானம் பெற முடிகிறது என்றார் அவர்.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் கூறியதாவது: மாநில அரசின் புதிய சூரிய மின்சக்தி கொள்கையின்படி, சூரிய தகடுகள் அமைப்பதற்கான ரூ.4.39 லட்சத்தில் 80 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள ரூ.1.04 லட்சம் செலுத்தினால் போதுமானது. அதுவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடனாக வழங்கப்படுகிறது.

    முன்னுரிமை அடிப்படையில் இந்த சூரிய மின்சக்தி நீர் இறைக்கும் மோட்டார்கள் கடலூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

    எனவே விவசாயிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai