சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில், காங்கிரஸ் கட்சி தனது பலத்தைக் காட்டத் தயாராகி வருகிறது.

  அகில இந்திய காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அண்மையில் வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சியை ஆரம்பித்தார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலிருந்து அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் வெளியேறி த.மா.காவில் இணைந்தனர். இதனைத் தடுக்கும் முயற்சியில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்ட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கவனம் செலுத்தி வருகிறார்.

  அந்த வகையில், காங்கிரஸ் மற்றும் த.மா.கா.வினரின் கவனத்தை ஈர்த்துள்ள மாவட்டம் கடலூர் தான். இம்மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமாக கடலூர் பாரதியார் சாலையில் அமைந்துள்ள நேரு பவன் விளங்கி வந்தது.

  ஜி.கே.வாசன் விலகலைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய முக்கியப் பிரமுகர்கள் த.மா.கா.வில் இணைந்ததோடு, கட்சியின் தலைமை அலுவலகத்தையும் கைப்பற்றினர். இதனால், இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து அலுவலகம் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்லப்பட்டு தற்போது போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், கோட்டாட்சியரின் தலைமையில் விசாரணை நடைபெற்று முதல் கட்டமாக இரு தரப்பினரும் சில ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர்.

  இதனால், இரு தரப்பினரும் கடலூர் மாவட்டத்தில் யார் பெரியவர்கள், எந்த தரப்பிற்கு அதிக தொண்டர்கள் உள்ளனர் என்பதை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

  அந்த வகையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தனது பலத்தை நிரூபிக்க முன் வந்துள்ளது. இக்கட்சி, செயல்வீரர்கள் கூட்டத்தை டிசம்பர் 16ஆம் தேதி கடலூர் நகர அரங்கில் நடத்துகிறது.

  இந்தக் கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, கார்த்தி ப.சிதம்பரம், எஸ்.கிருஷ்ணசாமி, சு.திருநாவுக்கரசர், கு.செல்வப்பெருந்தகை, கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் கட்சியின் அனைத்துப் பிரிவு நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென கடலூர் வடக்கு மாவட்டத் தலைவர் எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிகமான கூட்டத்தைத் திரட்ட சிரத்தையுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர்.

  பதிலடிக்கு தயாராகும் த.மா.கா: இந்த கூட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விரைவில் த.மா.காவின் கூட்டம் இருக்குமென த.மா.கா. நிர்வாகிகள் தெரிவித்துள்ளதோடு, காங்கிரஸின் கூட்டத்தை உன்னிப்பாக கவனிப்பதாகவும் கூறினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai