சுடச்சுட

  

  மணல் குவாரிக்கு எதிராக மீண்டும் போராட்டம் நடத்த முடிவு

  By விருத்தாசலம்,  |   Published on : 14th December 2014 03:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மணல் குவாரியை மூடக்கோரி வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் வரும் திங்கள்கிழமை மீண்டும் முற்றுகைப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  கார்மாங்குடி கிராமம் வெள்ளாற்றில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரிக்கு எதிராக கடந்த டிச. 2 ம் தேதி 13 க்கும் மேற்பட்ட கிராம மக்களும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தினரும் இணைந்து வெள்ளாற்றில் உள்ள மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மணல் குவாரியை தாற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

  அப்போது, அரசின் விதிமுறையை மீறி மணல் குவாரி இயங்குகிறதா என ஆய்வு செய்ய, அதிகாரிகள் குழு அமைக்கப்படும் என கோட்டாட்சியர் ப.மு. செந்தில்குமார் தெரிவித்தார். இந்நிலையில், எவ்வித முன்னறிவுப்பும் இன்றி, கடந்த சில நாள்களாக மீண்டும் மணல் குவாரி செயல்படத் தொடங்கியுள்ளது.

  இதையடுத்து, சி.கீரனூர் கிராமத்தில், கிராம மக்கள் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டு அதன் ஒருங்கிணைப்பாளராக மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சமூர்த்தி மற்றும் வெள்ளாற்றுப் பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 11 பேர் செயற்குழு உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது, கார்மாங்குடி மணல் குவாரியில் ரூ.100 கோடி அளவில் மோசடி நடந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், கருவேப்பிலங்குறிச்சி தேவங்குடி சாலையை உடனே சரிசெய்ய வேண்டும், சேலம், விழுப்புரம், பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரம் வெள்ளாறு மட்டுமே, லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசனத்துக்கு வெள்ளாற்றையே நம்பியுள்ளது. எனவே, கார்மாங்குடி மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை (டிச. 15) காலை 10 மணிக்கு மணல் குவாரியை முற்றுகையிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai