சுடச்சுட

    

    உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரியில் 12 லட்சம் மீன் குஞ்சுகள் விடும் திட்டத்தை அமைச்சர் எம்.சி.சம்பத் சனிக்கிழமை துவக்கி வைத்தார். முதல் கட்டமாக 2.15 லட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

    உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையில் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் 12.15 லட்சம் மீன் குஞ்சுகளை வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி முதல் கட்டமாக வீராணம் ஏரிக்கரை கந்தக்குமரன் என்ற இடத்தில் 2.15 லட்சம் மீன் குஞ்சுகளை விடும் திட்டத்தை அமைச்சர் எம்.சி.சம்பத் சனிக்கிழமை தொடங்கிவைத்தார். மாவட்ட ஆட்சியர் எஸ். சுரேஷ்குமார், கடலூர் மக்களவை உறுப்பினர் ஆ. அருண்மொழித் தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஏரியில் மீன் குஞ்சுகளை விட்டு திட்டத்தைத் துவக்கி வைத்து அமைச்சர் சம்பத் கூறியது: உள்நாட்டு மீன்வள மேம்பாட்டுக்காக அரசு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மானிய விலையில் வலைகள் வழங்குதல், மிதவை கூடுகளில் மீன் வளர்த்தல் உள்ளிட்ட சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வீராணம் ஏரியில் லால்பேட்டை, உடையார்குடி, சித்தமல்லி, புடையூர், ஓமாம்புலியூர் மற்றும் சேத்தியாதோப்பு ஆகிய கிராமங்களில் உள்ள 1000க்கும் மேற்பட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் தினமும் மீன்பிடிப்பின் மூலம் பயனடைந்து வருகின்றனர். இவர்களின் மேம்பாட்டுக்காக வீராணம் ஏரியில் மீன்வளத் துறையின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது வீராணம் ஏரியில் நீர்மட்டம் 44.60 அடியாக உயர்ந்துள்ளது. எனவே மீன் குஞ்சுகள் இருப்பு செய்ய இதுவே உகந்த காலமாகும். தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய நிதி உதவித் திட்டத்தின் மூலம் 2014-2015ஆம் ஆண்டுக்கு பெருரக மீன் குஞ்சு விரலிகள் 12.15 லட்சம் இருப்பு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக 2.15 லட்சம் கட்லா, ரோகு, மிர்கால், புல்கெண்டை, சில்வர் கெண்டை மீன் இன வகைகள் இங்கு விடப்பட்டுள்ளன. தொடர்ந்து 10 லட்சம் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யப்பட உள்ளது என்றார்.

    இந்நிகழ்ச்சியில் காட்டுமன்னார் கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் நா.முருகுமாறன், சார்- ஆட்சியர் அரவிந்த், முன்னாள் அமைச்சர் கே.கே. கலைமணி, கீரப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயபாலன், சரவணபவ கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை தலைவர் பாலமுருகன், கலியமலை ஊராட்சி மன்றத் தலைவர் செந்தில்குமார், மீன் வளத் துறை துணை இயக்குநர் கா.செல்வன், மீன்வளத் துறை ஆய்வாளர்கள் ஜெயராஜ், அஞ்சனாதேவி மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    மீனவர்கள் வேதனை

    இத்திட்டம் பெயரளவுக்கு மட்டுமே செயல்படுத்தப்படுவதாக உள்நாட்டு மீனவர்கள் சிலர் வேதனை தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், வீராணம் ஏரியில் ஆண்டு தோறும் மீன்வளத் துறையினர் 6 தவணைகளாக மீன் குஞ்சுகளை விடுவதாக தெரிவிக்கின்றனர். இத்திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைக்கும் தினத்தில் மட்டுமே, முதல் தவணையாக மீன் குஞ்சுகள் விடப்படுகின்றன. அதன் பிறகு மீன் குஞ்சுகள் விடப்படுவதில்லை.

    இந்த ஆண்டு 12.15 லட்சம் மீன் குஞ்சுகள் விடுவதாக இலக்கு நிர்ணயித்துள்ளனர். ஆனால் சுமார் 3 லட்சம் மீன் குஞ்சுகளுக்கு மேல் ஏரியில் விடுவதில்லை.

    இதனால் மீன் ஆதாரம் இல்லாமல் உள்நாட்டு மீனவர்கள் அவதியுறுகிறோம் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai