சுடச்சுட

  

  கடலூர் கெடிலம் ஆற்றில் ரூ.13.57 கோடியில் அமைக்கப்பட்ட கரைப் பகுதி, குடிநீர் குழாய் பழுது பார்க்கும் பணிக்காக அடிக்கடி தோண்டப்படுவதால், பலவீனமடைந்து வருகிறது.

  கடலூர் கம்மியம்பேட்டை வழியாகச் செல்லும் கெடிலம் ஆற்றின் கரைகள், பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பின் கீழ் ரூ.13.57 கோடி மதிப்பில் பலப்படுத்தப்பட்டது. இதற்காக, திருவந்திபுரம் முதல் கடலூர் அண்ணா பாலம் வரை 15 கி.மீ., தொலைவுக்கு ஆற்றின் இரு கரைகளும் மண் அணைக்கப்பட்டது. மேலும், கம்மியம்பேட்டை பாலம் அருகில், ஆற்றின் இடது கரையில் 47 மீட்டர் தொலைவுக்கு வெள்ள நீர் தடுப்பணையும் கட்டப்பட்டது.

  இதில் ஆற்றின் கரைப் பகுதி, மண்ணைக் கொட்டி பலப்படுத்தப்பட்டது. அதன் கீழ், கடலூர் நகராட்சி 1 முதல் 9-வது வார்டு மக்களின் தேவைக்காக திருவந்திபுரத்தில் இருந்து குடிநீர் குழாய் செல்கிறது.

  இந்தக் குழாய், சுமார் 150 மீட்டர் நீளம், 5 மீட்டர் ஆழத்தில் கரைக்குள் புதைந்துள்ளது. இதனால், குழாயில் ஏதாவது உடைப்பு, அடைப்பு, பழுது ஏற்படும் பட்சத்தில், கரையை 5 மீட்டர் ஆழத்துக்கு தோண்டி பழுது சரிபார்க்கப்பட வேண்டும். இந்தக் குழாயில் அண்மைக்காலமாக அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது.

  தீபாவளி பண்டிகையின் போது கூட, உடைந்த குடிநீர்க் குழாயை சரி செய்த பின்னர், அதன் மீது கரை அமைக்கும் பணி கடந்த 2 நாள்களாக நடந்து வந்தது.

  இந்நிலையில், சனிக்கிழமை இரவு மண்ணின் பாரம் தாங்காமல் மீண்டும் குடிநீர்க் குழாய் உடைந்தது. எனவே, திருவந்திபுரத்தில் இருந்து நீரேற்றும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், 9 வார்டு மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

  கரையை அமைக்கும் போது குடிநீர்க் குழாயை கரையையொட்டியுள்ள பகுதியில் அமைத்திருந்தால் பழுதை உடனடியாக சரி செய்ய ஏதுவாக இருந்திருக்கும். இதன் மூலம் பல கோடி மதிப்பில் கட்டப்பட்ட கரை சேதப்படுத்தப்படுவது தவிர்க்கப்பட்டிருக்கும்.

  பொதுப்பணித் துறை, நகராட்சி நிர்வாகத்திடம் போதிய புரிந்துணர்வு இல்லாததால் தான் குடிநீர்க் குழாய் மீது கரை அமைக்கப்பட்டுள்ளது.

  எனவே, கரைக்குள் உள்ள குடிநீர் குழாய்களுக்குப் பதிலாக, கரையையொட்டி புதிதாக குடிநீர்க் குழாய் அமைக்க நகராட்சி

  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai