சுடச்சுட

  

  நெய்வேலி பகுதியில் கொடிக் கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  நெய்வேலி புதுநகரில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் 22, 30-வது வட்டத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்தார்.

  இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலையில் அப்பகுதி வழியாகச் சென்றவர்கள் கட்சிக் கொடிக் கம்பங்கள், கல்வெட்டு சேதப்படுத்தப்பட்டிருப்பது குறித்து கட்சியினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற மாவட்டச் செயலாளர் பா.தாமரைச்செல்வன், என்.எல்.சி. எஸ்.சி., எஸ்.டி. பிரிவு நிர்வாகிகள் அந்த இடத்தை பார்வையிட்டனர்.

  பின்னர், நெய்வேலி புதுக்குப்பம் ரவுண்டானாவில் அம்பேத்கர் சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கொடிக் கம்பங்களை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.

  தகவல் அறிந்து அங்கு வந்த தெர்மல் போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

  இதில், மாவட்டப் பொருளர் மன்னர் நந்தன், நெய்வேலி நகர அமைப்பாளர் பாஷா, நிர்வாகிகள் முருகன், ராஜமுருகன், பன்னீர், கணேஷ் மூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

  இதுகுறித்து துணைச் செயலர் துரை.மருதமுத்து அளித்த புகாரின் பேரில், நெய்வேலி தெர்மல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai