சுடச்சுட

  

  கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே ஆண் சடலம் துண்டு துண்டாக வெட்டி 3 சூட்கேஸ்களில் அடைக்கப்பட்டு ஓடையில் வீசப்பட்டுக் கிடந்தது. அவற்றை போலீஸார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  விருத்தாசலத்தை அடுத்த கருவேப்பிலங்குறிச்சி, சுண்ணாம்புப் பாறையை ஒட்டி 20 அடி ஆழமுள்ள ஓடை செல்கிறது. இங்கு 3 சூட்கேஸ்கள் கிடந்ததை ஆடு மேய்க்கும் சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமை கண்டனர். அதிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்து, கருவேப்பிலங்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் ராதாகிருஷ்ணனிடம் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து கருவேப்பிலங்குறிச்சி போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

  சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், ஓடையில் கிடந்த சூட்கேஸ்களை எடுக்க முயற்சித்துள்ளனர். முடியாத நிலையில் திட்டக்குடி தீயணைப்புத் துறையினரை வரவழைத்து சூட்கேஸ்களை மீட்டபோது, ஒரு சூட்கேஸில் ஆணின் தலை மற்றும் கைகளும், மற்றொன்றில் கால்களும், மூன்றாவதில் உடலும் இருந்துள்ளன.

  மேலும், அப்பகுதியில் கிடந்த செல்போனை போலீஸார் கைப்பற்றி அதில் உள்ள எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது, உயிரிழந்தவர் சென்னையைச் சேர்ந்த வெங்கட்ராவ் (30), தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர் என்பதும், அவர் காணாமல் போனதாக புளியந்தோப்பு காவல் நிலையத்தில் அவரது தாய் செல்லம்மாள் புகார் செய்துள்ளதாக, மறுமுனையில் பேசிய வெங்கட்ராவின் தந்தை எத்திராஜுலு தெரிவித்ததாக போலீஸார் கூறினர்.

  இதையடுத்து, துண்டு, துண்டான சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார், அவற்றை உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது பெற்றோரை விழுப்புரம் மருத்துவமனைக்கு வரச் சொல்லி தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இதேபோன்று மருத்துவக் கல்லூரி மாணவரின் உடல் கொலையாளிகளால் துண்டு, துண்டாக வெட்டி வீசப்பட்டுக் கிடந்தது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai