சுடச்சுட

    

    என்.எல்.சி. நிறுவனம் தனது சிறப்புமிக்க நடவடிக்கைகளால் ஆண்டுக்கு 4 கோடி யூனிட் மின்சக்தியை மிச்சப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் இச்சேவையை பாராட்டி மத்திய மின்சக்தி அமைச்சகம் 2014-ம் ஆண்டுக்கான தேசிய சக்தி சேமிப்பு விருதை வழங்கியுள்ளது.

    நெய்வேலி என்எல்சி நிறுவனம் மின் உற்பத்தி மற்றும் பழுப்பு நிலக்கரி உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. நெய்வேலி சுரங்கங்களில், பழுப்பு நிலக்கரிக்கு மேலிருக்கும் மண் வெட்டி எடுக்கப்பட்டு, ஏற்கெனவே சுரங்கம் தோண்டப்பட்டிருக்கும் பள்ளங்களை நிரப்புவதற்காக

    கன்வேயர் பெல்ட்டுகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

    அந்த கன்வேயர் பெல்ட்டுகளின் பாதைகளை சிறப்பான திட்டமிடுதல் மூலம் மாற்றியமைத்து முதல் சுரங்கத்தின் புதிய சர்ஃபேஸ் பெஞ்ச், டாப் பெஞ்ச் மற்றும் லிக்னைட் பெஞ்ச் ஆகிய மூன்று அமைப்புகளிலும் சீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

    அதன் மூலம், 6.68 கி.மீ. தொலைவு கன்வேயர் செல்லும் பாதையின் நீளம் குறைக்கப்பட்டது. மேலும், டிரைவ் ஹெட் எனப்படும் இழுவை இயந்திரமும் 15 குறைக்கப்பட்டது. மேலும், தாழ்வான பகுதிகளிலிருந்து உயரமான பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படும் கன்வேயர் அமைப்புகளில் 30 மீட்டர் உயரம் குறைக்கப்பட்டது.

    இந்த முயற்சிகளின் மூலம் ஒரு டன் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்க ஏற்கெனவே செலவிடப்பட்ட 34.04 யூனிட் மின்சக்திக்குப் பதிலாக 25.65 யூனிட் மின்சக்தி மட்டுமே தேவைப்பட்டது. இதன் மூலம் ஒரு ஆண்டில் சுமார் 4 கோடி யூனிட் மின்சக்தி சேமிக்கப்படுகிறது. இதன் மதிப்பு ரூ. 13 கோடியே 49 லட்சம் ஆகும்.

    என்எல்சி முதல் சுரங்கத்தின் இச்சிறப்புமிக்க சக்தி சேமிப்பு முயற்சிகளைப் பாராட்டி, மத்திய மின்சக்தி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சக்தி சேமிப்புத் துறை, இந்திய சுரங்கத் துறையில் மிகச் சிறந்த நிறுவனமாக என்எல்சியை மதிப்பீடு செய்து, தேசிய சக்தி சேமிப்பு விருதைப் பெற தேர்ந்தெடுத்தது.

    புதுதில்லி விஞ்ஞான் பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய சக்தி சேமிப்பு நாள் விழாவில், மத்திய மின்சக்தி, நிலக்கரி, நவீன மற்றும் புதுப்பிக்கவல்ல ஆற்றல் துறையின் இணை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் மத்திய சக்தி சேமிப்புத் துறையின் பொது இயக்குநர் அஜய் மாத்தூர் ஆகியோரிடமிருந்து என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகன் விருதை பெற்றுக்கொண்டார்.

    சுரங்கம் 1 மற்றும் 1ஏ-யின் தலைமைப் பொதுமேலாளர் சையதுஅப்துல் பதேக் ஹாலித், முதல் சுரங்க மின்துறைப் பொதுமேலாளர் என்.பாண்டியன்

    ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai