சுடச்சுட

  

  பெற்றோரை இழந்த 4 சிறுமிகளை காப்பகத்தில் சேர்க்க ஆட்சியர் நடவடிக்கை

  By கடலூர்,  |   Published on : 16th December 2014 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தின்போது, பெற்றோரை இழந்த 4 சிறுமிகளை காப்பகத்தில் சேர்க்க ஆட்சியர் நடவடிக்கை எடுத்தார்.

  மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, கல்விக் கடன் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

  மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியர், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

  கூட்டத்தின் போது பயனாளிகளுக்கு ஆட்சியர் நலத்திட்ட உதவி வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் 4 சிறுமிகள் சோகத்துடன் நிற்பதைப் பார்த்து அவர்களிடம் நீங்கள் எதற்காக வந்தீர்கள் என்று கேட்டார்.

  அதற்கு அவர்கள், தாங்கள் தனது பாட்டியுடன் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க வந்திருப்பதாக தெரிவித்தனர். பின்னர், சிறுமிகள் தெரிவித்த தகவலின்படி மனு கொடுப்பதற்காக வரிசையில் காத்திருந்த பண்ருட்டி வட்டம், சூரக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கருப்பாயி என்பவர் அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

  அதில், 4 சிறுமிகளும் கருப்பாயியின் மகன் வழி பேத்திகளான சிவசக்தி (12), கீர்த்திகா (10), கீர்த்தனா (8), திவ்யா (4) என்பது தெரிய வந்தது. கருப்பாயியின் மகன், மருமகள் இறந்து விட்ட நிலையில், 4 பெண் குழந்தைகளையும் கூலி வேலை செய்து கருப்பாயி காப்பாற்றி வருவது தெரிய வந்தது. அந்த 4 சிறுமிகளுக்கும் உதவி கேட்டு மனு கொடுப்பதற்காக வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

  இதனையடுத்து அந்த 4 சிறுமிகளையும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்திட மாவட்ட ஆட்சியர் உடனடியாக உத்தரவிட்டார்.

  கூட்டத்தில் தாட்கோ மூலம் ஒருவருக்கு மானியத்துடன் கூடிய கடனுதவியாக ரூ.4.12 லட்சம் மதிப்பிலான வாகனம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை மூலம் 7 பேருக்கு எம்ராய்டரி தையல் இயந்திரம், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து 4 பயனாளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கினார்.

  மேலும், கண்களை கட்டி சதுரங்கம் விளையாடி தமிழ்நாடு, இந்தியா மற்றும் ஆசிய சாதனை புத்தகங்களில் சாதனை பதிவு செய்த கடலூரைச் சேர்ந்த 5 மாணவர்கள் ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai