சுடச்சுட

  

  விருத்தாசலம் அருகே கார்மாங்குடி மணல் குவாரியை மூடக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  விழுப்புரம், கடலூர், சேலம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக வெள்ளாறு செல்கிறது. வெள்ளாற்றை நம்பியே பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர்.

  இதனிடையே, விருத்தாசலத்தை அடுத்த கார்மாங்குடி கிராமம் வழியாகச் செல்லும் வெள்ளாற்றில் உள்ள மணல் குவாரியை மூடக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த 13-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

  இதனைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 2-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக மாவட்ட நிர்வாகம் குவாரியை தாற்காலிகமாக மூட உத்தரவிட்டது.

  இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் அறிவிப்பின்றி குவாரி செயல்படத் தொடங்கியது. இதுகுறித்து, கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் கேட்டதற்கு உரிய பதிலளிக்கவில்லை. இதனையடுத்து கிராம மக்கள் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

  கூட்டத்தில், வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டு, கார்மாங்குடி மணல் குவாரியில் ரூ.100 கோடி அளவில் மோசடி நடந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், கருவேப்பிலங்குறிச்சி-தேவங்குடி சாலையை உடனே சரிசெய்ய வேண்டும், கார்மாங்குடி மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை காலை 10 மணிக்கு மனித உரிமை பாதுகாப்பு மையத்துடன் இணைந்து மணல் குவாரியை முற்றுகையிடுவது என முடிவெடுக்கப்பட்டது.

  அதன்படி, திங்கள்கிழமை காலை மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜு, வெள்ளாறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பஞ்சமூர்த்தி, ராஜவன்னியன் மற்றும் ஏராளமான பெண்கள் உள்ளிட்ட 1000 -க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மணல் குவாரியில் திரண்டனர்.

  அப்போது, மணல் குவாரிக்கும், அரசுக்கும் எதிர்ப்பு தெரிவித்தபடி குரல் எழுப்பிய மக்கள், ஆற்றில் 15 அடிக்கும் மேல் வெட்டப்பட்டிருந்த குழிக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோட்டாட்சியர் ப.மு.செந்தில்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

  அப்போது, விதிமுறைகளுக்கு உட்பட்டே குவாரி செயல்படுவதாகப் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

  எனவே, நீங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் எனத் தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள், விதிமுறைகள் மீறப்படவில்லை எனக் கூறிய பொதுப்பணித் துறை அதிகாரிகளை இங்கு அழைத்து வாருங்கள்.

  அவர்களே இந்த ஆற்றின் நிலைமையை பார்க்கட்டும். நீங்கள் மணல் குவாரியை மூடும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் எனக் கூறியதைத் தொடர்ந்து கோட்டாட்சியர் புறப்பட்டார். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு ஆற்றிலேயே கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது.

  இதுகுறித்து, மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சி.ராஜு தெரிவித்தது: மாநில சுற்றுச்சூழல் ஆணையம் சார்பில், ஜனவரி மாதம் 3 ஆண்டுகளுக்கு சுமார் 68,000 யூனிட் மணலை மனிதர்களால் மட்டுமே எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டது.

  ஆனால், இங்கே 3-க்கும் மேற்பட்ட பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு நாளொன்றுக்கு 300-க்கும் மேற்பட்ட லாரிகளில் மணலை அள்ளிச் செல்கின்றனர்.

  சுற்றுச்சூழல் ஆணையம் 3 ஆண்டுகளுக்கு கூறிய அளவை, 1 மாதத்திலேயே அள்ளியுள்ளனர். இதனால், கடந்த 9 மாதங்களில் சுமார் ரூ.150 கோடிக்கு மேல் முறைகேடாக மணல் எடுக்கப்பட்டு உள்ளது.

  விவசாயமே அழிந்து போகும் நிலை உருவாகியுள்ளதால் தான் மக்கள் போராட முன்வந்திருக்கிறார்கள். எனவே, மணல் குவாரியை மூடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai