சுடச்சுட

  

  காங்கிரஸார் கோஷ்டி மோதல்;  சிதம்பரம் ஆதரவாளர் தாக்கப்பட்டார்: இளங்கோவன் வருகை ரத்து

  By  கடலூர்,  |   Published on : 17th December 2014 01:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வரவேற்பு பேனர் வைப்பதில் காங்கிரஸ் கட்சியினரிடையே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட கோஷ்டி மோதலின் போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர் தாக்கப்பட்டார். இதையடுத்து கடலூருக்கு வரத் திட்டமிட்டிருந்த அக்கட்சி மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
   அகில இந்திய காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமிக்கப்பட்டார். இவர் கட்சி வளர்ச்சிக்காக மாவட்டந்தோறும் சென்று கட்சியினரை சந்தித்து வருகிறார்.
   அதன்படி, கடலூர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக கடலூர் வடக்கு, மற்றும் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பிலும் கட்சியில் செல்வாக்குள்ள தனி நபர்கள் சார்பிலும் வரவேற்பு பேனர், போஸ்டர், பத்திரிகை விளம்பரம் என்று அவரை வரவேற்க ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
   மேலும், கடலூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான நேரு பவனை ஜி.கே.வாசனின் த.மா.கா.வினர் கைப்பற்றி அது தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனால், தங்கள் முழு பலத்தையும் காட்ட வேண்டுமென காங்கிரஸார் திட்டமிட்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்தனர்.
   அதற்கான வரவேற்பு பேனர் அமைப்பதில் ப.சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்தவர் என கருதப்படுபவரும், ராகுல் காந்தி இளையோர் பேரவை மாநிலத் தலைவருமான பி.வி.சிவக்குமார் தரப்பினருக்கும், கே.ஐ. மணிரத்தினம் தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. திங்கள்கிழமை இரவு, செயற்குழு கூட்டம் நடைபெறவிருந்த நகர அரங்கில், பி.வி. சிவக்குமார் வைத்திருந்த வரவேற்பு பேனரை அகற்றி விட்டு அங்கு கே.ஐ. மணிரத்தினம் பேனர் வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனைத் தட்டிக்கேட்ட போது இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கைகலப்பில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.
   இதில், பி.வி. சிவக்குமார் காயமடைந்து கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர் செவ்வாய்க்கிழமை காலையில் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
   அதில், கடலூர் 4-வது வார்டு கவுன்சிலர் கு.பில்லா மற்றும் 4 பேர் சேர்ந்து தன்னை தாக்கியதாக கூறியுள்ளார். இதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
   இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நடைபெறவிருந்த காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் எம்.ஆர். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
   த.மா.கா.வினருக்கு எதிராக தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுமென எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில் கட்சியில் ஏற்பட்ட கோஷ்டி மோதலால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
   அதே நேரத்தில், நேரு பவனை மீட்க வேண்டிய கட்டாயம், கோஷ்டி பூசலை சமாளிக்க வேண்டிய நெருக்கடி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஏற்பட்டுள்ளது.
   இருவர் கைது: இந்நிலையில் சிவகுமார் புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் இதுதொடர்பாக கு.பில்லா, பார்த்திபன் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் இருவரைத் தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai