சுடச்சுட

  

  கார்மாங்குடி மணல் குவாரி தாற்காலிகமாக மூடப்பட்டது:  13 கிராம மக்கள் போராட்டம் எதிரொலி

  By  விருத்தாசலம்  |   Published on : 17th December 2014 01:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருத்தாசலத்தை அடுத்த கார்மாங்குடி வெள்ளாற்றில் இயங்கி வந்த மணல் குவாரி 13 கிராம மக்களின் போராட்டத்தின் காரணமாக தாற்காலிகமாக மூடப்பட்டது.
   கார்மாங்குடி கிராமம் வெள்ளாற்றில் இயங்கி வரும் மணல் குவாரிக்கு தடை விதிக்கக் கோரி, வெள்ளாற்றுப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் 13 கிராமங்களைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திங்கள்கிழமை ஆற்றில் இறங்கி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   அப்போது, கோட்டாட்சியர் ப.மு. செந்தில்குமார் போராட்டக்காரர்களிடம் பேச்சு நடத்தினார். இதில், உடன்பாடு ஏற்படாததைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவும் போராட்டம் தொடர்ந்தது.
   மழையிலும் ஆற்றிலேயே தங்கினர்: மக்கள் ஆற்றிலேயே தங்கினர். அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். இதனையடுத்து, செவ்வாய்க்கிழமை காலையும் இந்தப் போராட்டம் நீடித்தது. அப்போது பலத்த மழை பெய்தது. அதையும் பொருட்படுத்தாமல் கொட்டும் மழையிலும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   இதையடுத்து அங்கு அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பான சூழல் நிலவியது.
   இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கோட்டாட்சியர் ப.மு.செந்தில்குமார் மீண்டும் போராட்டக்காரர்களிடம் பேச்சு நடத்தினார். இதில், குவாரியில் முறைகேடாக மணல் அள்ளப்பட்டுள்ளதாகக் கூறுகிறீர்கள். ஆனால், பொதுப்பணித் துறை அதிகாரிகள், அப்படி முறைகேடு எதுவும் நடக்கவில்லை எனக் கூறுகின்றனர் எனத் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த போராட்டக்காரர்கள், முறைகேடுகள் நடக்கவில்லை என்றால், இதுவரை எத்தனை யுனிட் மணல் அள்ளப்பட்டிருக்கிறது, எந்தெந்த பகுதிகளில் மணல் அள்ளப்பட்டிருக்கிறது என்பது போன்ற விவரங்களை பொதுப்பணித் துறை அதிகாரிகள் வழங்க வேண்டும் எனக் கூறினர்.
   இதுகுறித்து டிசம்பர் 20ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும். அதுவரை, குவாரி தாற்காலிகமாக மூடப்படும் என கோட்டாட்சியர் தெரிவித்தார்.
   இதைத்தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
   இதுகுறித்து போராட்டக்காரர்கள் தெரிவித்தது:
   குவாரியில் கடந்த 10 மாதங்களில் ரூ.150 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது. சட்டவிரோதமாக மணலை அள்ளியுள்ளனர். அரசு இனியும் இங்கு குவாரிக்கு அனுமதி அளித்தால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai