சுடச்சுட

  

  கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த இருவர் உயிரிழந்தனர்.
   இதையடுத்து, மின் துறை அதிகாரிகளையும், பணியில் இல்லாத மருத்துவரை கண்டித்தும் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
   பரங்கிப்பேட்டை மாதா கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜோதிக்குமார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளராக உள்ளார். இவரது மனைவி காவேரி (40).
   இவர் செவ்வாய்க்கிழமை காலை வீட்டின் முன்பகுதியில் குப்பை கூட்டும் போது, இவர் வீட்டுக்கு பின் உள்ள கோவிந்தராஜு என்பவர் வீட்டுக்குச் செல்லும் மின் கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதை கவனிக்காமல் மின் கம்பியை காவேரி மிதித்துள்ளார். இதனால் அவர் தூக்கி வீசப்பட்டு கீழே கிடந்துள்ளார்.
   அப்போது அவ்வழியே வந்த எதிர் வீட்டில் வசிக்கும் ஜெகந்நாதன் (45), காவேரி கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அவரை தூக்கியுள்ளார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் இருவரையும் பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். காவேரி மிகவும் அபாயநிலையில் இருந்துள்ளார். மருத்துவமனையில் 30 நிமிடத்துக்கும் மேலாக பணியில் மருத்துவர் இல்லாததால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காவேரி உயிரிழந்தார்.
   மறியல்: தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. கற்பனைச்செல்வம், ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் வேல்முருகன், விவசாய சங்க அமைப்பாளர் கருணைச்செல்வம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, பணியில் மருத்துவர் இல்லாததை கண்டித்தும், பழுதான மின் கம்பியை மாற்றாத மின் துறையை கண்டித்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர். ராஜாராம், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் இருதயமேரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் மின் துறை அதிகாரிகள் மீதும், பணியில் இல்லாத மருத்துவர் மீதும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வது என்றும், இறந்தவர்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடுத் தொகை பெற்றுத் தருவது எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்று சடலங்களை பெற்றுச் சென்றனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai