சுடச்சுட

  

  கடலூர் மாவட்டம், திட்டக்குடியில் பட்டா அளவீடு செய்ய விவசாயியிடம் ரூ.7 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

  திட்டக்குடியை அடுத்த கோழியூரைச் சேர்ந்தவர் விவசாயி ராமலிங்கம். இவர் தனது பட்டா நிலத்தை அளவீடு செய்வது தொடர்பாக திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் 22-ம் தேதி மனு அளித்துள்ளார். இதையடுத்து, திட்டக்குடி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்ராஜாவை  சந்தித்து, பட்டா அளவீடு செய்ய வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருப்பதாகவும், அந்த விண்ணப்பத்தை பரிந்துரைத்து, அளவீடு செய்து தரவேண்டும் எனவும் கோரியுள்ளார். இதற்கு சுரேஷ்ராஜா, பட்டா அளவீடு செய்ய ரூ.15 ஆயிரம் வழங்கவேண்டும் எனக் கூறியதாகத் தெரிகிறது. பின்னர், நடந்த பேச்சுவார்த்தையில் ரூ.7 ஆயிரம் வழங்க முடிவானது.

  இதையடுத்து ராமலிங்கம், மாவட்ட லஞ்ச ஒழிப்புப் போலீஸில் புகார் செய்துள்ளார். பின்னர், லஞ்ச ஒழிப்பு துணைக் கண்காணிப்பாளர் உதயசங்கரின் ஆலோசனையின் பேரில், புதன்கிழமை சுரேஷ்ராஜாவை சந்தித்த ராமலிங்கம், அவரிடம் ரூ.7 ஆயிரம் வழங்கிய போது, அங்கு மறைந்திருந்த போலீஸார் சுரேஷ்ராஜாவை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

  இதையடுத்து அவரை கைது செய்து கடலூர் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி

  வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai