சுடச்சுட

    

    வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் மத்திய குழு ஆய்வு

    By கடலூர்  |   Published on : 19th December 2014 03:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த கீழச்செருவாய் வெலிங்டன் நீர்த் தேக்கத்தின் கரையை பலப்படுத்த நிதி ஒதுக்குவது தொடர்பாக மத்திய நீர்வள ஆதார மேம்பாட்டுத் திட்ட தலைமைப் பொறியாளர் தலைமையிலான குழுவினர் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

    திட்டக்குடி அருகேயுள்ள கீழச்செருவாய் பகுதியில் உள்ள வெலிங்டன் நீர்த் தேக்கத்தின் மூலம் விருத்தாசலம், திட்டக்குடி வட்டங்களில் உள்ள சுமார் 24 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

    இந்த நீர்த் தேக்கத்தின் கரை 1500 முதல் 2 ஆயிரத்து 700 மீட்டர் நீளம் கொண்டது. இதில், 200 மீட்டர் கரை பலவீனமானதைத் தொடர்ந்து 200 மீட்டர் கரை பலப்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து, தமிழக அரசு, மத்திய நீர்வள ஆதார அமைப்பிடம் வெலிங்டன் நீர்த்தேக்கத்தை சீரமைக்க நிதி ஒதுக்க பரிந்துரை செய்தது.

    இதையடுத்து, மத்திய நீர்வள ஆதார மேம்பாட்டு ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் மிடாய் தலைமையில் பொறியாளர்கள் புர்பா, சுப்ராவ், மண்டே ஆகியோர் கொண்ட குழுவினர் வெலிங்டன் நீர்த் தேக்கத்தின் கரைகளின் உறுதித் தன்மை மற்றும் உபரிநீர் வெளியேற்றும் கடகால் ஆகியவற்றை வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், விருத்தாசலம் உதவி கோட்ட செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவிப் பொறியாளர் கோவிந்தராஜ், பாசன ஆய்வாளர்கள் கலியமூர்த்தி, முருகேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.

    இதைத் தொடர்ந்து, மத்திய நீர்வள ஆதார அமைப்பின் தலைமைப் பொறியாளர் மிடாய் கூறியதாவது: வெலிங்டன் நீர்த் தேக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கரையை பலப்படுத்த, சாலை அமைக்க, மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்க, கரையில் உள்ள கசிவுநீரை வெளியேற்ற திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, மழைக் காலங்களில் பெருக்கெடுத்து வரும் உபரிநீரை வெளியேற்றும் கடகால் பகுதியில் உள்ள 30 கதவணைகளிலும் மின்மோட்டார் பொருத்தப்பட்டு கதவணை தூக்கி இறக்க போதிய நிதி ஒதுக்க திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.

    முழுக் கொள்ளளவு உள்ளபோது ஏரியில் உள்ள தண்ணீரில் ஏற்படும் அலையால் கரை பாதிக்காத வண்ணம் இருக்க, அலை தாங்கி அமைக்கவும் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிதிஒதுக்க பரிந்துரை செய்யப்படும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai