சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் தரமற்ற உரம் விநியோகம் செய்யப்படுவதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

  கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். வேளாண்மை இணை இயக்குநர் த.தனசேகர், உதவி இயக்குநர் எஸ்.பூவராகன், துணை இயக்குநர் பி.ஹரிதாஸ், நபார்டு உதவி பொதுமேலாளர் ஆர்.ராஜகோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கூட்டம் தொடங்கியதும் ஆட்சியர் பேசுகையில், இந்திய அளவில் பயறு வகைகளை அதிக அளவில் உற்பத்தி செய்ததற்காக தமிழக அரசுக்கு "கிரிஷிகருமான்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடலூர் மாவட்டத்துக்கு முக்கியப் பங்குண்டு. நாம் இணைந்து செயல்பட்டால் பல விருதுகளைப்பெற முடியும். விவசாயிகளின் நலனுக்காக வேளாண்மைத் துறை மூலமாக வேளாண்மை காலண்டர் தயாரிக்கப்படும். இதில் ஒவ்வொரு மாவட்டமும் விவசாயிகள், வேளாண் துறையினர் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறிக்கப்பட்டிருக்கும் என்றார்.

  கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது, புவனகிரி வி.வேல்முருகன்: விவசாயிகளுக்கு குறுஞ்செய்திகள் (எஸ்.எம்.எஸ்.) மூலமாக அனுப்பப்படும் வேளாண் தகவலில் மழை குறித்த தகவலையும் சேர்க்க வேண்டும்.

  காட்டுமன்னார்கோயில் எம்.செல்வராஜ்: பெல்லாந்துறை-பாளையங்கோட்டை இடையே 14 ஏரிகள் தூர்வாரப்படவில்லை.

  விருத்தாசலம் கலியபெருமாள்: கொம்பாடிகுப்பம் பகுதியில் என்எல்சி கொட்டி வைக்கும் மணலை விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு அள்ளிச்செல்ல அனுமதிக்க வேண்டும்.

  கம்மாவரம் வி.குப்புசாமி: விவசாயிகளின் உளுந்து, பயறு வகைகளை மான், காட்டுப்பன்றிகள் அழித்து வருவதால் வேலி அமைக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் ஜி.மாதவன்: நெல் குவிண்டாலுக்கு ரூ.1,410-ம், சன்னரகத்திற்கு ரூ.1,470-ம் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்ற போதிலும் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம் பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்புக்கு நடப்பாண்டிற்கு விலை நிர்ணயிக்க வேண்டும். தெற்கு, வடக்கு பிச்சாவரத்தில் 200 ஏக்கரில் மணிலா பயிர் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோன்று, மங்களூர் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி தண்ணீரில் மூழ்கியுள்ளது என்றார்.

  ஜி.ஆர்.ரவீந்திரன்: கடலூர் மாவட்டத்தில் கடல்நீர் உள்ளே புகாதவாறு தடுப்பணை அமைக்க வேண்டும். கடைமடை பகுதியில் சுமார் 500 ஏக்கர் நெல் பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

  கார்மாங்குடி வெங்கடேசன்: மாவட்டத்திலுள்ள அனைத்து ஏரி, குளங்களையும் தூர் வார வேண்டும்.

  இவ்வாறு கூட்டத்தில் பேசிய பெரும்பாலான விவசாயிகள் ஏரி, குளம், வரத்து மற்றும் வடிகால் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன என்றனர்.

  தரமற்ற உரம் விநியோகம்: இதனிடையே குறைதீர் கூட்டத்தின்போது, மங்களூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் உர மூட்டையுடன் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரை சந்தித்தனர். அப்போது, ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேலாண்மைத் திட்டத்தின் கீழ் மங்களூர் பகுதியில் இயற்கை நுண்ணூட்ட உரம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது.

  ஆனால், அந்த உரத்தை எந்த நிறுவனம் தயாரித்தது, தயாரிப்பு தேதி உள்ளிட்ட எந்த விவரமும் இல்லை.

  இந்த உரத்தை பயிர் வகைகளுக்கு இடும் போது அது நீரில் கரையாமல் அப்படியே உள்ளது. இதனால், போலி உரம் தயாரித்து அதனை வேளாண்மைத் துறையினர் மூலமாக விநியோகிப்பவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஆட்சியர் உறுதியளித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai