சுடச்சுட

  

  சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் ரூ.1.25 கோடி செலவில் சீரமைக்கப்பட்டுள்ள புதிய தேர் வருகிற 25-ஆம் தேதி வெள்ளோட்டம் விடப்படுகிறது.

  உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு, 375 ஆண்டுகளுக்கு முன்பு பச்சையப்ப முதலியாரால் தேர்கள் காணிக்கையாக வழங்கப்பட்டு, தேரோட்டம் நடைபெற்று வருகிறது.

  இந்நிலையில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் உள்ள 5 தேர்களில் ஸ்ரீ நடராஜர் தேர் மற்றும் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் தேர்கள் பழுதடைந்தன.

  இதனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழாவின்போது தேர்கள் வீதிகளில் நிற்காமல் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டன.

  தேர்களை சீரமைக்க வலியுறுத்தி இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் தலைவர் மு.செங்குட்டுவன் தலைமையில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

  இதனையடுத்து பச்சையப்பன் அறக்கட்டளைத் தலைவர் ஜெயச்சந்திரன், செயலர் ராஜகோபால், பொதுதீட்சிதர்களின் செயலர் ரா.பாஸ்கர தீட்சிதர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் தேர்களை பார்வையிட்டு, கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.

  பின்னர் காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய இடங்களில் இருந்து சிற்பிகள் வரவழைக்கப்பட்டு, ரூ.55 லட்சம் செலவில் சிவகாமசுந்தரி அம்மன் தேர் சீரமைத்து கட்டி முடிக்கப்பட்டது.

  இதைத்தொடர்ந்து கடந்த ஆனித்திருமஞ்சன தேர் திருவிழாவின்போது சிவகாமசுந்தரி அம்மன் புதிய தேர் பொது தீட்சிதர்களால் வெள்ளோட்டம் விடப்பட்டது.

  அப்போது நடராஜப் பெருமான் தேர் தாற்காலிகமாக சீரமைக்கப்பட்டு, இயக்கப்பட்டது.

  அதன்பின்னர் நடராஜப் பெருமான் தேரை மார்கழி ஆருத்ரா தரிசனத்துக்கு முன்பு ரூ 1.25 கோடி செலவில் சீரமைத்து, கட்டுமானப் பணிகளை முடிப்பது என முடிவெடுக்கப்பட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன.

  தேர் சீரமைக்கும் பணியை பச்சையப்பன் அறக்கட்டளை நிதிக்குழுத் தலைவரும், சென்னை மாநகராட்சி கவுன்சிலருமான ஆர்.பிரதாப்குமார் கடந்த மாதம் 5-ஆம் தேதி ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினர்.

  இதையடுத்து நடராஜப் பெருமானின் தேர் முற்றிலுமாக பிரித்தெடுக்கப்பட்டு, திருவாரூரைச் சேர்ந்த ஸ்தபதி சிவனேசன் தலைமையில் ஊழியர்கள் தேர் கட்டுமானப்பணியில் ஈடுபட்டனர். 21 அடி உயரம், 21 அடி அகலத்தில் தேர் முற்றிலுமாக சீரமைக்கப்பட்டு பணி முடிவடைந்துள்ளன.

  வருகிற 2015-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன உத்சவ தேர்த்திருவிழாவும், ஜனவரி 5-ஆம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளன.

  இதனால் வரும் 25-ஆம் தேதி நடராஜப்பெருமான் புதிய தேர் வெள்ளோட்ட பவனி நடத்த பச்சையப்பன் அறக்கட்டளையினரும், கோயில் பொதுதீட்சிதர்களும் முடிவு செய்துள்ளனர். மேலும் புதிய தேருக்கு ரூ.2.60 லட்சம் செலவில் புதிய துணிகளும் அமைக்கப்படுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai