சுடச்சுட

  

  வேப்பூர் கூட்டுரோட்டில் நடைபெறும் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி விருத்தாசலம்-சேலம் இடையேயான நெடுஞ்சாலையில் வியாபாரிகள் வெள்ளிக்கிழமை திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  கடலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி சார்பில், வேப்பூர் கூட்டுரோட்டில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை சந்தை நடைபெறும். இந்தச் சந்தையில் விழுப்புரம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காய்கறி, ஆட்டு வியாபாரிகள் சுமார் 500-க்கும் மேற்பட்டவர்கள் கூடுவது வழக்கம். இந்த சந்தையில் சுமார் ரூ.1 கோடிக்கும் மேல் வர்த்தகம் நடைபெறுகிறது. இதன் மூலம் ஊராட்சிக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.40 லட்சம் வருவாய் கிடைக்கிறது.

  எனினும் வாரச்சந்தையில் மழைக் காலங்களில் மழை நீர் தேங்கி குட்டையாக காட்சியளிப்பதுடன், சேறும் சகதியுமாக உள்ளது. எனவே, வாரச்சந்தை நடைபெறும் இடத்தில் மழை நீர் தேங்காமல் இருக்கவும், மாலை நேரங்களில் மின் வசதி செய்து தரவும், கழிவறை கட்டவும் ஊராட்சிக்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். எனினும், அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் அண்மையில் பெய்த மழையால் வாரசந்தை நடைபெறும் இடத்தில் மழை நீர் தேங்கி சந்தை நடைபெற இயலாத நிலை ஏற்பட்டது.

  இந்நிலையில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து வேப்பூர் காய்கறி வாரச்சந்தை வியாபாரிகள் நலச்சங்கத் தலைவர் ரவிக்குமார் தலைமையில், வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டவர்கள் விருத்தாசலம்-சேலம் இடையேயான நெடுஞ்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  இதுகுறித்து தகவல் அறிந்த வந்த வேப்பூர் காவல் ஆய்வாளர் சுப்புராயுலு, உதவி ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தரும் வரையில் ஊராட்சிக்கு வாடகைப்பணம் கட்டுவது இல்லை என முடிவு செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட வியாபாரிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai