Enable Javscript for better performance
சடலத்தை புதைப்பதில் இரு பிரிவினர் மோதல்: 5 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சடலத்தை புதைப்பதில் இரு பிரிவினர் மோதல்: 5 பேர் கைது

    By பண்ருட்டி  |   Published on : 21st December 2014 04:00 AM  |   அ+அ அ-   |    |  

    பண்ருட்டி அருகே சடலத்தைப் புதைப்பதில் வெள்ளிக்கிழமை இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பண்ருட்டியை அடுத்துள்ள மேட்டாமேடு-பணப்பாக்கம் எல்லையில் அரசு புறம்போக்கு வாய்க்கால் உள்ளது. இதன் அருகே விவசாய நிலம் வைத்துள்ள மனோகரன் என்பவர் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறார்.

    இந்நிலையில், மேட்டாமேடு பகுதியில் இறந்த ஒருவரின் சடலத்தை, மனோகரன் விவசாயம் செய்யும் வாய்க்காலில் புதைக்க வந்தனராம். இதனை மனோகரன் மற்றும் பணப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் தடுத்துள்ளனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மேட்டாமேடு பகுதியை சேர்ந்தவர்கள் தாக்கியதில் மனோகரன், கோபாலகிருஷ்ணன் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் பண்ருட்டி அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவர்கள், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பணப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவியின் கணவர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த அப்பகுதியினர் திரண்டு சென்று மேட்டாமேடு பகுதியினரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.

    பின்னர் இந்த மோதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மேட்டாமேடு பகுதியைச் சேர்ந்த 5 பேரை புதுப்பேட்டை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai