சிறப்பு மருத்துவ காப்பீடு முகாம்: 810 பேருக்கு பரிசோதனை
By கடலூர் | Published on : 21st December 2014 04:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கடலூர் அருகே சனிக்கிழமை நடைபெற்ற தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் 810 பேர் மருத்துவ பரிசோதனை செய்துக்கொண்டனர்.
கடலூர் மாவட்டம், சான்றோர்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் முகாமை தொடங்கி வைத்து, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கத்தின் மூலம் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 7 பேருக்கு இலவச கண் கண்ணாடி, 6 பயனாளிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவிகளை வழங்கினார்.
முகாமில் ரத்தப்பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, இதய பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
சிறப்பு சிகிச்சைகளாக இதய நோய், கர்ப்பப்பை பரிசோதனை, எலும்பு சம்பந்தப்பட்ட நோய், குழந்தைகள் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, பல், கண் பரிசோதனை, தோல்நோய் சிகிச்சை போன்ற நோய்களுக்கு சிறப்பு மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர்.
முகாமில் 810 பயனாளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு 35 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் மல்லிகா வைத்திலிங்கம், கடலூர் நகர்மன்றத் தலைவர் ஆர்.குமரன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் ஜவகர்லால், வட்டார மருத்துவ அலுவலர் ஆர்.லெட்சுமி, மாவட்ட விரிவாக்க கல்வியாளர் சண்முகம் மற்றும் அறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், குழுவினர் கலந்து கொண்டனர்.