சுடச்சுட

  

  கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரையில் கட்டப்பட்ட சுனாமி நினைவுத்தூண் முறைப்படி திறக்கப்பட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை கடலூர் மாவட்டத்தின் கடற்கரையோர கிராமங்களில் கொடூரத் தாக்குதலை நிகழ்த்தியது.

  இதில் 500-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். சுமார் 50 பேரை காணவில்லை. இந்தப் பேரழிவு மாவட்ட மக்களின் நினைவுகளில் நீங்காத துயரச் சுவடாக அமைந்துள்ளது.

  இதனை நினைவுகூரும் வகையில், கடலூரில் நினைவு மண்டபம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அப்போதைய ஆட்சியர் ககன்தீப்சிங்பேடி, கடலூர் வெள்ளி கடற்கரையில் சுனாமி பேரழிவால் உயிர்நீத்தவர்களுக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார்.

  இதற்கான நிகழ்வு 2005-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி நடந்தது.

  ஆனால் அதற்குப்பிறகு அதில் நினைவு மண்டபம் எழுப்பப்படவில்லை. ஒவ்வொரு சுனாமி நினைவு நாளின்போதும் பொதுமக்கள், ஆழிப்பேரலையில் உயிர்நீத்தவர்களின் உறவினர்கள், பல்வேறு அமைப்பினர் நினைவு மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல்லில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து, அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

  மேலும், நினைவு மண்டபம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் எழுப்பி வருகின்றனர்.

  இந்நிலையில், வெள்ளி கடற்கரையில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பில் நினைவுத்தூண் அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டது. கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டு இந்த நினைவுத்தூண் கடந்த ஜனவரியில் முழு பணியும் நிறைவுற்றது.

  சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அமைச்சர், நகராட்சி தலைவர் உள்ளிட்டவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

  ஆனால் சுனாமி ஏற்பட்ட ஆண்டு, அதனால் ஏற்பட்ட பாதிப்பு போன்ற எந்த தகவலும் இடம்பெறவில்லை. மேலும், நினைவுத்தூண் குறித்த எந்த குறிப்பும் இடம்பெறவில்லை.

  வரும் டிசம்பர் 26-ஆம் தேதி சுனாமி தாக்கியதன் 10-ஆம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாக இந்த நினைவுத்தூணை முறைப்படி திறந்து வைத்து, பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், கடலூர் மாவட்டத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் குறித்த விவரங்கள் நினைவுத்தூணில் இடம்பெறும் வகையில் பொறிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நினைவுத்தூண் என்பது முழுமை பெறும். அத்துடன் ஏற்கெனவே அறிவித்தபடி நினைவு மண்டபம் அமைக்க அரசு முன்வர வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai