சுடச்சுட

  

  பண்ருட்டியை அடுத்த அழகப்பசமுத்திரம் ஊராட்சியில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் 2 ஆண்டுகளாக பணியாளர் நியமிக்கப்படாததால், அப்பகுதி குழந்தைகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

  பண்ருட்டி ஒன்றியத்துக்கு உள்பட்டது அழகப்பசமுத்திரம் ஊராட்சி. இங்குள்ள காலனி பகுதியில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களின் குழந்தைகள் நலன் கருதி இப்பகுதியில் 2 அங்கன்வாடி மையங்கள் சுமார் 50 அடி தூரத்தில் தனித்தனியே செயல்படுகின்றன.

  பணியாளர் இல்லை: ஆஸ்பெட்டாஸ் கூரை போட்டப்பட்ட சொந்தக் கட்டடத்தில் இயங்கும் (எண் 33) ஒரு அங்கன்வாடி மையத்தில், நெடுந்தெரு, கோயில் தெரு, வடக்கு மற்றும் கிழக்கு தெருவைச் சேர்ந்த சுமார் 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு கடந்த 2 ஆண்டுகளாக அங்கன்வாடி பணியாளர் இல்லை. இதனால் மையத்துக்கு வரும் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளவோ, பாடம் நடத்தவோ ஆள் இல்லை.

  வாடகை கட்டடத்தில் இயங்கும் மற்றொரு அங்கன்வாடி மையத்தில் சுமார் 10 குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கு வயது முதிர்த்த பெண் உதவியாளர் ஒருவர் மட்டுமே குழந்தைகளுக்கு உணவு சமைத்து கொடுத்து, கவனித்து வருகிறார். இவருக்கு எழுதப்படிக்கத் தெரியாது. இதனால் குழந்தைகளுக்கு தனக்குத் தெரிந்த கதைகளை மட்டும் சொல்லிக்கொடுப்பதாகத் தெரிகிறது.

  பாதுகாப்பு கேள்விக்குறி:

  இவ்விரு மையத்திலும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, மின்சார வசதி என்று எதுவும் இல்லை. மேலும் நாய்களும் அவ்வப்போது சுற்றித் திரிவதால், இங்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

  கடந்த 2012-ஆம் ஆண்டு தானே புயல் திட்டத்தில் ரூ.1 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட ஆஸ்பெட்டாஸ் கூரை போட்ட அங்கன்வாடி கட்டடமும், ஓடு போட்ட மற்றொரு அங்கன்வாடி கட்டடமும், மழைக் காலத்தில் ஒழுகுவதாக குழந்தைகளின் பெற்றோர் புகார் தெரிவிக்கின்றனர்.

  இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது: வசதி இல்லாத தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் இங்கு படித்து வருகின்றனர். அங்கன்வாடி மையம் எண் 33-ல் கடந்த 2 ஆண்டுகளாக பணியாளர் நியமிக்கப்படவில்லை. இதனால் குழந்தைகளின் படிப்பு மற்றும் வளர்ச்சி பாதிக்கப்படுவதால், அங்கன்வாடி பணியாளரை நியமிக்க வேண்டும்.

  வாடகை கட்டடத்தில் இயங்கும் மற்றொரு அங்கன்வாடி மையத்துக்கு சொந்த கட்டடம் கட்டித்தர வேண்டும். இரு மையங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பறைகளை கட்டித்தர வேண்டும். இவற்றை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai