சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப் 4 தேர்வில் 47,870 பேர் பங்கேற்றனர். தேர்வுப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

  கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி, விருத்தாசலம் ஆகிய 8 இடங்களில் 114 மையங்களில் 187 தேர்வுக் கூடங்களில் ஞாயிற்றுக்கிழமை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு எழுத 56,678 நபர்கள் அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் 47,870 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 8,808 பேர் தேர்வு எழுதவில்லை.

  கடலூர் புனிதமேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் புனித அன்னாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வுகளை ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:

  போட்டித்தேர்வில் முறைகேடுகள் ஏதுவும் நடைபெறாமல் கண்காணிக்கும் பொருட்டு சார்ஆட்சியர், கோட்டாட்சியர்கள் மற்றும் துணை ஆட்சியர்கள் தலைமையில் 13 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, 27 நடமாடும் வாகனக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

  அனைத்து தேர்வு மையங்களிலும் முறைகேடுகள் நடைபெறாத வகையில் கண்காணிப்பதற்காக விடியோ கேமிராக்கள் மூலம் பதிவு செய்ய 122 விடியோகிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  மேலும், முறைகேடுகளை தடுக்க மாவட்டத்தில் 3 தேர்வுக் கூடங்களில் இணையதள கேமிராக்கள் பொருத்தப்பட்டு தேர்வாணையத்தால் நேரடியாகக் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. முதன்மைக் கண்காணிப்பாளர்கள் 187 நபர்களும், தேர்வுக்கூடக் கண்காணிப்பாளர்கள் 187 நபர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

  இந்த ஆய்வின்போது கடலூர் கோட்டாட்சியர் மோ.ஷர்மிளா, வட்டாட்சியர் எழிலன், டி.என்.பி.எஸ்.சி. பிரிவு அலுவலர் ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.

  விருத்தாசலம்: இதனிடையே விருத்தாசலம் கோட்டத்தில் 27 மையங்களில் நடைபெற்ற தேர்வில், 6,682 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வை கோட்டாட்சியர் ப.மு.செந்தில்குமார் பார்வையிட்டார்.

  தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த 7,936 விண்ணப்பதாரர்களில், 1,254 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  சிதம்பரம்: 17 மையங்களில் நடைபெற்ற தேர்வுக்கு 9,275 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

  எனினும் 7,846 பேர் மட்டுமே பங்கேற்று, தேர்வெழுதினர். 1,429 பேர் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. தேர்வு மையங்களில் கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரி புவனேஸ்வரி, சிதம்பரம் வட்டாட்சியர் ஜி.அன்புசெல்வி, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் ஆகியோர் கொண்ட பறக்கும் படையினர் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai