சுடச்சுட

  

  தாராளமய பொருளாதாரக் கொள்கையே நாட்டின் ஏற்றத் தாழ்வுக்குக் காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட 21ஆவது மாநாடு, நெய்வேலியில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மாநாட்டை கட்சியின் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்துப் பேசியது:

  இந்தியாவை மையப்படுத்தி உற்பத்தி என்ற பாஜகவின் கொள்கையால் பொருளாதாரம் உயர்ந்துள்ளது என்று அமித்ஷா கூறி வருகிறார். ஆனால் இந்தியாவில் உள்ள 120 கோடி மக்கள் தொகையில் 1 சதவீதம் அதாவது, 1 கோடியே 20 லட்சம் பேரிடம் மொத்த சொத்தில் 49 சதவீதம் உள்ளது. மீதி உள்ள 99 சதவீதமான 118 கோடியே 80 லட்சம் பேரிடம் 51 சதவீதம் சொத்துகள் மட்டுமே உள்ளன. இது ஒரு ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

  கடந்த 1991ஆம் ஆண்டு முதல் காங்கிரஸýம், பாஜகவும் போட்டி போட்டுக் கொண்டு அமல்படுத்தி வந்த தாராளமய பொருளாதாரக் கொள்கையால்தான் இந்தியாவில் இந்த ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்துள்ளன.

  நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காப்பீட்டுத் துறையில் 49 சதவீத அன்னிய முதலீட்டைக் கொண்டு வரும் மசோதாவை நிறைவேற்றுவோம் என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். இந்த மசோதாவை தயாரித்தது காங்கிரஸ் தான்.

  50 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் இருக்கும் தொழிலாளர் சட்டங்களை திருத்தி வருகின்றனர். இது போன்ற சட்டங்களை திருத்துவதற்கு காங்கிரஸýம், தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் பாரபட்சம் இல்லாமல் ஆதரிக்கின்றன.

  சென்னையில் பாக்ஸான் நிறுவனத்தை மூடுவதற்கு எதிரான சிஐடியுவின் போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்கும்.

  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை முடக்க முயற்சி எடுத்து வருகின்றனர். உழைப்பாளர்கள் மீதான பொருளாதார தாக்குதலை எதிர்க்க ஒன்று திரண்டு போராட முற்படும்போது அதனை தடுக்கவும், ஒற்றுமையை சீர்குலைக்கவும் பாஜக முயற்சிக்கிறது. இதுபோன்ற செயல்களை மார்க்சிஸ்ட் கட்சியினர் உயிரை கொடுத்தேனும் தடுத்து நிறுத்துவர் என்றார் ஜி.ராமகிருஷ்ணன்.

  முன்னதாக மாநாட்டுக் கொடியை மூத்தத் தலைவர் டி.ராஜாராமன் ஏற்றி வைத்தார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலர் டி.ஆறுமுகம் சமர்ப்பித்தார். மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, வி.முத்துவேல், எம்.மருதவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாடு 23 ஆம் தேதி வரை நடக்கிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai