சுடச்சுட

  

  கடலூர் அருகே மனைவியை எரித்துக் கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

  கடலூர் மாவட்டம், வடலூர் ஆர்.சி.நேதாஜி நகரைச் சேர்ந்தவர் கார்த்தி என்ற கார்த்திகேயன் (26). லாரிகளுக்கு மணல் அள்ளும் வேலைபார்த்து வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜி என்ற விஜயலட்சுமி (24) என்பவரை 2010ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார். அப்போது, 5 பவுன் நகையும், ரூ.10 ஆயிரம் சீதனமாக கேட்டுள்ளார். விஜி குடும்பத்தினர் 3 பவுன் நகையும், ரூ.5 ஆயிரமும் வழங்கியுள்ளனர். தம்பதியினருக்கு ரமணன் என்ற குழந்தை உள்ளது.

  இந்நிலையில், மீதமுள்ள வரதட்சிணையை வாங்கி வருமாறு விஜியை, கார்த்தி துன்புறுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக கடந்த 27-6-2012ல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, விஜி மீது கார்த்தி மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த விஜி கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் உயிரிழந்தார்.

  இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வடலூர் போலீஸார் கார்த்தியை கைது செய்தனர். வழக்கு விசாரணை கடலூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

  இறுதி கட்ட விசாரணைக்குப் பின்னர் நீதிபதி செல்வம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கினார். அதில், மனைவியை தீ வைத்து எரித்துக் கொன்ற கார்த்திக்கு ஆயுள் தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்தார். இதையடுத்து, கார்த்தி கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai