சுடச்சுட

    

    போக்குவரத்து பணியாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்

    By  கடலூர்,  |   Published on : 24th December 2014 12:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாலைப் பாதுகாப்பு சட்ட மசோதாவை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளர் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     போக்குவரத்துத் துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் சாலைப் பாதுகாப்பு சட்ட மசோதா 2014ஐ திரும்பப் பெற வேண்டும், வட்டார போக்குவரத்து அலுவலர் பதவி உயர்வு தொடர்பான விதியை திருத்தம் செய்ய வேண்டும், அரசுக்கு வருவாயை அதிகரிக்கச் செய்ய புதிய சோதனைச் சாவடிகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளர் கூட்டமைப்பினர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
     அதன்படி கடலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி வட்டாரப் போக்குவரத்து கிளை அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்தனர். பின்னர், கடலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த அகில இந்திய போக்குவரத்துத் துறை பணியாளர்கள் சம்மேளனத்தலைவர் கு. பாலசுப்பிரமணியன் பேசுகையில், போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கும் ஒவ்வொரு முறையும் வாகனங்களை ஓட்டிக்காட்ட வேண்டியிருக்கும். பேருந்துகளில் கட்டணச்சலுகையை பெற முடியாததோடு, மாநில அரசுகளின் வருவாயும் பாதிக்கப்படும். இது மாநில அரசின் உரிமையை பறிக்கும் செயலாகும். தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களின் பிரச்னையை பேசித் தீர்க்க முன்வர வேண்டும் என்றார்.
     ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க துணைப்பொதுச் செயலர் பெ.நல்லதம்பி, மாவட்ட செயலர் மு.ராசாமணி, டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் கு.சரவணன் ஆகியோர் பேசினர்.
     கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், வில்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai