சுடச்சுட

  

  கடலூர் நகராட்சியில் ரூ.12 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் பயன்படுத்த முடியாத நிலையில் மூடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

  கடலூர் நகராட்சி 2-வது வார்டுக்குள்பட்ட குண்டு சாலையில் சுனாமி அவரச கால உதவித் திட்டம் 2005-06ன் கீழ், பல்நோக்கு சமுதாயக் கூடம் கடந்த 2007-ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.

  இந்த சமுதாயக்கூடத்தை அப்பகுதியில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் சுமார் 500 குடும்பத்தினர் பயன்படுத்தி வந்தனர்.

  ஒவ்வொரு மாதமும் பிறந்த நாள், வளைகாப்பு, நிச்சயதார்த்தம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் சிலர் திருமண வைபவங்களையும் நடத்தி வந்தனர்.

  இதற்காக ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ரூ.500 கட்டணமாக செலுத்தி வந்தனர். மாதம் 20 நிகழ்ச்சிகள் வரையில் நடத்தப்பட்டு வந்தன. குறைந்த கட்டணம், வீட்டின் அருகிலேயே அனைத்து வசதிகளும் கொண்டதாக இருந்ததால், இப்பகுதியினர் சமுதாயக் கூடத்தை அதிகளவு பயன்படுத்தி வந்தனர்.

  ஆனால், கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், சமுதாயக் கூடத்தின் பயன்பாடு முடங்கியது.

  ஏனெனில், முந்தைய திமுக ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டத்தின் கீழ், கடலூர் நகராட்சி பகுதியில் விநியோகம் செய்யப்படாமலிருந்த வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் இந்த அறையில் அடைத்து வைக்கப்பட்டன. தேர்தல் நடைமுறைக்குப் பின்னர் வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் தொலைக்காட்சி பெட்டிகள் பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. இதனால் அறையில் வைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளின் நிலையும் என்ன ஆனது என்று தெரியவில்லை.

  இவ்வாறு, பொதுமக்களுக்கு பயன்பட வேண்டிய வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி ஒருபுறம் வீணாகியதோடு, பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சமுதாயக் கூடமும் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டது.

  எனவே, இந்த விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தொலைக்காட்சிப் பெட்டிகளை அப்புறப்படுத்தி விட்டு சமுதாயக் கூடத்தினை மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai