சுடச்சுட

  

  ரூ.1.25 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோயிலின் நடராஜர் தேர் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

  நடராஜர் கோயிலில் உள்ள 5 தேர்களில் நடராஜர் தேர் மற்றும் சிவகாமசுந்தரி அம்மன் தேர் பழுதடைந்தன. தேர்களை சீரமைப்பது குறித்து பச்சையப்பன் அறக்கட்டளைத் தலைவர் ஜெயச்சந்திரன், செயலாளர் ராஜகோபால் மற்றும் நிர்வாகிகள் தேர்களை பார்வையிட்டு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டனர்.

  இதையடுத்து, ரூ.55 லட்சம் செலவில் சிவகாமசுந்தரி அம்மன் தேர் சீரமைக்கப்பட்டது.

  பின்னர், கடந்த ஆனித் திருமஞ்சன தேர்த் திருவிழாவின்போது சிவகாமிசுந்தரி அம்மன் புதிய தேர் பொதுதீட்சிதர்களால் வெள்ளோட்டம் விடப்பட்டது.

  இதைத்தொடர்ந்து, நடராஜர் தேர் தாற்காலிகமாக சீரமைக்கப்பட்டு ஆனித் திருமஞ்சன திருவிழாவின் போது இயக்கப்பட்டது.

  பின்னர், நடராஜர் தேரை மார்கழி ஆருத்ரா தரிசனத்துக்கு முன்பு ரூ. 1.25 கோடி செலவில் சீரமைத்து கட்டுமானப் பணிகளை முடிப்பது என முடிவெடுக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெற்றன.

  இதையடுத்து, நடராஜர் தேர் முற்றிலுமாக பிரித்தெடுக்கப்பட்டு, திருவாரூரைச் சேர்ந்த ஸ்தபதி சிவனேசன் தலைமையில் ஊழியர்கள் தேர் கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர். 21 அடி உயரம், 21 அடி அகலத்தில் தேர் முற்றிலுமாக சீரமைக்கப்பட்டு பணி நிறைவுற்றது.

  வருகிற ஜனவரி 4-ம் தேதி ஆருத்ரா தரிசன உற்சவ தேர்த் திருவிழா, 5-ம் தேதி ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு டிசம்பர் 25-ம் தேதி வியாழக்கிழமை நடராஜர் புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது.

  வியாழக்கிழமை காலை பொதுதீட்சிதர்களால் புதிய தேருக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது.

  இந்நிகழ்ச்சியில் பொதுதீட்சிதர்களில் செயலாளர் ரா.பாஸ்கரதீட்சிதர், நடராஜ சுப்பிரமணிய தீட்சிதர், பச்சையப்பன் அறக்கட்டளை நிதிக்குழுத் தலைவர் ஆர்.பிரதாப்குமார், செயலாளர் ராஜகோபால், நகர்மன்ற துணைத் தலைவர் ரா.செந்தில்குமார், இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன், செயலாளர் சந்திரசேகரன், பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சி.என்.சிங்காரவேலு, மேற்பார்வையாளர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து

  கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai