சுடச்சுட

  

  பொதுமக்கள் தங்களின் அன்றாட உணவில், உடலுக்கு நலம் பயக்கும் சிறுதானிய உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

  அண்ணாகிராமம் ஒன்றியம், மேல்பட்டாம்பாக்கத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத் துறையின் சார்பில் பாரம்பரிய உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை துவங்கியது. ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். விழாவை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்துப் பேசியது:

  நம் அன்றாட உணவில் பிரதான தானியமாக பயன்படுத்தப்படும் அரிசியில் செய்யப்படும் அனைத்து உணவுகளைப் போல, சிறு தானியங்களான கம்பு, வரகு, கேழ்வரகு, சாமை, குதிரைவாலி, சோளம், மக்காச்சோளம், திணை போன்ற சிறு தானியங்களில் சாதம், இட்லி, தோசை, புட்டு, முறுக்கு, பாயாசம், கொழுக்கட்டை, அதிரசம் போன்றவை செய்யலாம். சிறுதானியங்களில் அடங்கியுள்ள சத்துகளான மக்னீசியம் இதய நோயை போக்கும், நீரிழிவு நோய் வராமல் தடுக்கும்.

  கடலூர் மாவட்டத்தில் 2,023 அங்கன்வாடி மையங்களில் 43,588 குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்கப்படுகின்றன. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி இணை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் 53,750 குழந்தைகள், 15,299 கர்ப்பிணிகள், 14 ஆயிரம் பாலூட்டும் தாய்மார்கள் பயனடைந்து வருகின்றனர் என்றார்.

  தொடர்ந்து பாரம்பரிய உணவு செயல்முறை விளக்க கையேட்டை அமைச்சர் வெளியிட ஆட்சியர் பெற்றுக் கொண்டார். கையேட்டில் 56 வகை உணவுகள் தயார் செய்யும் முறை விளக்கப்பட்டுள்ளது.

  தொடர்ந்து பாரம்பரிய உணவு குறித்த கட்டுரை, பேச்சு, சிறுதானிய சமையல் போட்டி, ஆரோக்கிய குழந்தைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

  விழாவில் மாவட்ட ஊராட்சித் தலைவர் மல்லிகா வைத்திலிங்கம், ஒன்றியக்குழுத் தலைவர் சுந்தரி முருகன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கோஅன்பழகி, ஒன்றிய குழு துணைத்தலைவர். திரு.எம்.சி.சம்பந்தம், பேரூராட்சித் தலைவர்கள் எ.அர்ச்சுனன், கே.வள்ளி கலந்து கொண்டனர்.

  மனுநீதி நாள் முகாம்: தொடர்ந்து, கடலூர் வட்டம் நல்லாத்தூர் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனு நீதி நாள் முகாமில் 202 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

  கோட்டாட்சியர் மோ.ஷர்மிளா, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கோ.ஐயப்பன், ஒன்றிய குழுத் துணைத் தலைவர் பாலாம்பிகை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சே.அழகானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai