சுடச்சுட

  

  சுனாமி தாக்கியதன் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் கடலுக்கு பால் ஊற்றியும், நினைவுத் தூணுக்கு மலர்வளையம் வைத்தும் கடலோர மக்கள் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

  கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி சுனாமி என்னும் ஆழிப்பேரலை தாக்கியதில் கடலூர் மாவட்டத்தில் 617 பேர் உயிரிழந்தனர். 51 மீனவ கிராமங்களில் பாதிப்பு ஏற்பட்டதோடு, 38 பேர் காணாமல் போயினர். உறவுகளை இழந்து வாடுபவர்களுக்கு ஆறுதல் கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

  அதன்படி, கடலூர் வெள்ளி கடற்கரையில் அமைக்கப்பட்ட சுனாமி நினைவு தூணில் தமிழ்நாடு மீனவர் பேரவையினர் மாநில துணைத் தலைவர் என்.மாரியப்பன் தலைமையில், மலர் தூவியும் கடலில் பாலை ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

  மாவட்ட நிர்வாகம் சார்பில் கோட்டாட்சியர் மோ.ஷர்மிளா, கடலூர் வட்டாட்சியர்கள் செழியன், முரளி மற்றும் அரசு அலுவலர்கள் அஞ்சலி செலுத்தினர்.

  இதேபோல் அதிமுக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தமிழக மீனவர் வாழ்வுரிமை இயக்கம், அன்னை தெரசா சேவை மையம், கடலூர் கிங்ஸ் ரோட்ராக்ட் கிளப் ஆகியவை சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

  இதனிடையே ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்திருந்து மெழுகுவர்த்தி ஏற்றியும், கடலில் பாலை ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

  சிதம்பரம் அருகே கிள்ளை, பரங்கிப்பேட்டை பகுதிகளில் சுனாமியின் போது 342 பேர் இறந்தனர். உயிரிழந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கிள்ளையில் நடைபெற்றது. பேரூராட்சித் தலைவர் எஸ்.வித்யாதித்தன் தலைமையில் மீன்வளத் துறை முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் சுனாமியின் போது 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இப்பகுதியில் சுனாமி நினைவு தினத்தையொட்டி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மரக்காணம் பேரூராட்சிக்கு உள்பட்ட எக்கியார்குப்பத்தில் அரசு சார்பில் சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

  திண்டிவனம் உதவி ஆட்சியர் ஸ்ரீதர் உயிரிழந்த மீனவர்களின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப் பகுதி கடற்கரையில் மலர் தூவியும், பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

  புதுச்சேரி: புதுச்சேரியில் சுனாமி நினைவு தினம் கடற்கரை பகுதிகளில் அனுசரிக்கப்பட்டது. கடற்கரை காந்தி சிலை அருகே அரசு சார்பில் முதல்வர் என்.ரங்கசாமி பூக்களை தூவி மலரஞ்சலி செலுத்தினார்.

  பேரவைத் தலைவர் வ.சபாபதி, அமைச்சர்கள் தி.தியாகராஜன், என்.ஜி.பன்னீர்செல்வம், தேசிய மீனவர் பேரவைத் தலைவர் இளங்கோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கடலில் மலர் தூவியும் பாலை ஊற்றியும் அஞ்சலி செலுத்தினர்.

  ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. மெழுகுவர்த்தி ஏற்றி பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தினார்.

  வைத்திக்குப்பம் கிராம மக்கள் மாசி மக தீர்த்தவாரி திடலில் கடல் அன்னை ஆலயத்தை உருவாக்கினர்.

  அங்கு மேடை அமைக்கப்பட்டு அதில் ஒரு பெண் குடத்துடன் நிற்பது போலவும், பின்புறம் மீன் இருப்பது போல சிலை அமைக்கப்பட்டுள்ளது.

  அதன் திறப்பு விழா மற்றும் சுனாமி நினைவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  இதையொட்டி நூற்றுக்கணக்கான பெண்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் கடல் அன்னை சிலைக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். இதேபோல புதுவை கடற்கரையை ஒட்டியுள்ள 18 மீனவ கிராம மக்கள் ஆங்காங்கே அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்தினர்.

  இதேபோல பல்வேறு இயக்கங்கள் சார்பில் காந்தி சிலை பின்புறம் கடலில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai