Enable Javscript for better performance
அரசுப் பேருந்து சேவை முடங்கியது: பயணிகள் கடும் அவதி- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பேருந்து சேவை முடங்கியது: பயணிகள் கடும் அவதி

    By கடலூர்,  |   Published on : 29th December 2014 04:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து சேவை முடங்கியது.

    தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 11 தொழிற்சங்கத்தினர் (அண்ணா தொழிற்சங்கம் தவிர்த்து) போராட்ட அறிவிப்பு வெளியிட்டனர்.

    இதனையடுத்து, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அரசு சென்னையில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தியது. இது தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து திட்டமிட்டபடி டிசம்பர் 29-ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறுமென தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர்.

    ஆனால், திட்டமிட்டதற்கு ஒரு நாளுக்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமையே தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், பிற்பகலுக்கு மேல் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாமல் போக்குவரத்து பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன. குறிப்பாக, பிற்பகல் 2 மணிக்கு பணிக்கு வர வேண்டிய தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லை. மேலும், சனிக்கிழமை பணிக்கு வந்தவர்கள் ஞாயிற்றுக்கிழமை பணியை முடித்ததால் அந்தப் பேருந்துகளும் பணிமனையில் நிறுத்தப்பட்டன.

    இதனால், பேருந்துகள் இயக்கப்படாததால் மாவட்டத்தில் குக்கிராமங்கள் முதல் நகரங்கள் வரை பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். நீண்ட நேரமாக பேருந்து நிலையத்தில் காத்திருந்த மக்கள் பேருந்து கிடைக்காமல் வீடுகளுக்குத் திரும்பினர். கடலூர் பேருந்து நிலையம் வெறிச்சோடியது. தனியார் பேருந்துகளில் மக்கள் கூட்டத்தை காண முடிந்தது.

    மாவட்டத்தில் 10 பேருந்து பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து 240 நகரப் பேருந்துகள், 385 புறநகர்ப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    இதில், 90 சதவீதம் பேருந்துகள் இயக்கப்படவில்லை என கடலூர் போக்குவரத்துக் கழக சிஐடியு தலைவர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.

    மாவட்டத்தில் போக்குவரத்து கழகத்தில் சுமார் 3,694 பேர் பணியாற்றுகின்றனர். 625 பேருந்துகளை இயக்க 1,250 பேர் பணிக்கு வந்தாலே போதுமானது. எனவே, முழுமையாக பேருந்துகளை இயக்கத் தேவையான நடவடிக்கையை நிர்வாகம் எடுத்துள்ளது என்றும், பொதுமக்களுக்கு முழுமையான சேவையளிக்கப்படும் என்றும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    பண்ருட்டி

    போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக பண்ருட்டியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் அரசுப் பேருந்துகள் சரிவர இயங்காததால் பயணிகள் அவதி அடைந்தனர். பண்ருட்டி பேருந்து நிலையத்தில் பயணிகளின் கூட்டம் காணப்பட்டது.

    பெரும்பாலான அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பண்ருட்டி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

    ரயில்களில் கூட்டம்: பண்ருட்டி வழியாக சென்னை, காட்பாடி மற்றும் திருச்சி செல்லும் ரயில்களில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

    விருத்தாசலம்

    விருத்தாசலத்தில் உள்ள இரண்டு போக்குவரத்து பணிமனைகளில் 800 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 135 பேருந்துகள் இயங்கி வருகின்றன. இதில், சுழற்சிமுறையில் பணிக்கு வரவேண்டிய 400 தொழிலாளர்கள் பணிக்கு வராததால், பணிமனைகளிலேயே பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டன.

    10 சதவிகிதத்துக்கும் குறைவான பேருந்துகள் மட்டுமே இயங்குவதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai