சுடச்சுட

  

  கடலூர், புதுவை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை கடல் சீற்றமாக இருந்ததால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

  இலங்கை அருகே வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்திருப்பதால் தமிழகம், புதுவையின் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

  கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாவட்டத்தில் பரவலாக தூரல் மழை இருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலையிலும் இந்த மழை நீடித்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

  காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டது. வழக்கத்தை விட அதிக உயரத்துக்கு அலைகள் எழும்பின. இதனால், ஞாயிற்றுக்கிழமை காலையில்

  மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை. அதே நேரத்தில், ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றவர்களும் கடல் சீற்றம் காரணமாக உடனடியாக கரை திரும்பினர். கடந்த 26-ம் தேதியும் கடல் சீற்றமாக காணப்பட்டது. எனவே, தொடர்ந்து 3 நாள்களாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

  இதுகுறித்து, தமிழ்நாடு மீனவர் பேரவை மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் கூறுகையில், மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் கட்டுமரங்களும், விசைப்படகு, பைபர், கல்லா படகு வகைகள் சுமார் ஆயிரம் உள்ளன. கடந்த 3 நாள்களாக கடல் வழக்கத்தை விட அதிக சீற்றமாக காணப்படுவதால், 6 ஆயிரம் படகுகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 50 ஆயிரம் மீனவக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.

  புதுச்சேரி: புதுவையில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே தொடர்ந்து தூறல் மழை பெய்யத் தொடங்கியது. அதோடு குளிர்ந்த காற்றும் வீசியதால மக்கள் அவதிக்குள்ளாகினர்.

  கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால், மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் 250-க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

  இதே போல் 18 மீனவக் கிராமங்களைச் சேர்ந்தவர்களும் கடலுக்குச் செல்லவில்லை.

  ஞாயிற்றுக்கிழமைகளில் மகாத்மா காந்தி சாலையில் கூடும் சண்டே மார்க்கெட் வியாபாரம் மழையால் பாதிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai