சுடச்சுட

  

  மதுவுக்கு எதிராக பிரசாரம் மேற்கொண்டு வரும் 2 இளைஞர் குழுவினர் கடலூரில் ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனர்.

  தமிழகத்தில் மதுவுக்கு எதிரான பிரசார இயக்கங்கள் வலுப்பெற்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

  அந்த வகையில், மது போதைக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற இயக்கம் அண்மையில் தொடங்கப்பட்டது.

  இந்த இயக்கத்தினர் கடந்த அக்டோபர் 2-ம் தேதி கன்னியாகுமரியில் மது போதைக்கு எதிரான 100 நாள் நடைப்பயணத்தை தொடங்கினர்.

  80 இயக்கங்களின் ஆதரவோடு, 25 இளைஞர்கள் நடைப்பயணமாக 32 மாவட்டங்களுக்குச் சென்று 100 நாள்களில் 100 கிராமங்கள் மற்றும் நகரங்களில் பிரசாரம் மேற்கொண்டு சென்னையில் ஜனவரி 12-ம் தேதி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

  அப்போது, வீதி நாடகம், பொதுக்கூட்டம், கல்லூரி பள்ளி மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.

  அதன்படி, இக்குழுவினர் ஞாயிற்றுக்கிழமை கடலூருக்கு வந்தனர். குழுவினருக்கு கடலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

  மதுவுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்த குழுவினர் மஞ்சக்குப்பம் வழியாக புதுச்சேரிக்குச் சென்றனர்.

  தாகம் மாணவர் சங்கம்: அதேபோன்று, மதுவில்லா இந்தியாவை உருவாக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தாகம் மாணவர் சங்கத்தினர் தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் கடந்த 24-ம் தேதி விஜயவர்மன், மகேந்திரன் ஆகியோர் தலைமையில் 30 மாணவர்கள் ஒளிச்சுடரேந்தி ஓட்டத்தை தொடங்கினர்.

  கடலூருக்கு சனிக்கிழமை இரவு வந்த மாணவர் குழுவினருக்கு தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் அய்யனார் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை காலையில் பண்ருட்டி, திண்டிவனம் வழியாக தங்களது ஒளிச்சுடர் ஓட்டத்தை தொடங்கினர்.

  இதே கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி, கோத்தகிரியிலிருந்து ஒளிச்சுடரேந்தி ஓடி வரும் 2 குழுவினருடன் சேர்ந்து சென்னை மெரினாவில் தீப ஓட்டப்பயணம் நிறைவு பெறுவதாகவும், மதிமுக பொதுச்செயலர் வைகோ ஓட்டப் பயணத்தை நிறைவு செய்து பேசுகிறார் என்றும் விஜயவர்மன் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai