சுடச்சுட

  

  தொடர் மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக திங்கள்கிழமையும் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

  கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, மழைத் தூறல் விழுந்து கொண்டே இருந்தது. இதனால், குளிர்ச்சியான சீதோஷணம் நிலவியது.

  தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதால் மழை பெய்வதோடு, கடல் சீற்றமும் இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

  அதன்படி, கடலூர் மாவட்டத்தில் கடல் சீற்றமாக காணப்பட்டது. மழையும் விடாமல் பெய்துகொண்டே இருந்தது. இதனால், கட்டுமரம், நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. ஆழ்கடலில் மீன்பிடிக்கும் தொழிலாளர்களும் 2-வது நாளாக திங்கள்கிழமை மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் கடலூர் மாவட்டத்தில் மீன் சந்தைகளில் மீன் தட்டுப்பாட்டை காண முடிந்தது.

  திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): சிதம்பரம் 21.40, கடலூர் 19, பரங்கிப்பேட்டை 29, காட்டுமன்னார்கோவில் 24, தொழுதூர் 8, முஷ்ணம் 21, விருத்தாசலம் 8.30, பண்ருட்டி 6.20, கொத்தவாச்சேரி 19, கீழச்செருவாய் 5, வானமாதேவி 14.40, அண்ணாமலை நகர் 26, சேத்தியாத்தோப்பு 13, புவனகிரி 18, லால்பேட்டை 24, மீ.மாத்தூர் 8, காட்டுமயிலூர் 15, வேப்பூர் 17.50, குப்பநத்தம் 9.40, லாக்கூர் 7, பாலந்துறை 11.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai