சுடச்சுட

  

  பள்ளி மாணவர் சாவு: சிபிஐ விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

  By கடலூர்,  |   Published on : 30th December 2014 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பள்ளி மாணவர் சாவு குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரி அனைத்துக் கட்சி சார்பில் கடலூரில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயுள்ள சேப்ளாநத்தம் பகுதியைச் சேர்ந்த ராமநாதன்-அம்பிகா தம்பதி மகன் ராம்குமார் (16). பெரம்பலூரில் தனியார் கல்வி நிறுவனத்தில் தங்கியிருந்து பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில், மாணவர் டிசம்பர் 22-ம் தேதி தற்கொலை செய்துகொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.

  மாணவரின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமநாதன், மனு செய்துள்ளதோடு உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்.

  இந்நிலையில், மாணவரின் சாவு குறித்தும், அப்பள்ளியில் இதுவரையில் 46 மாணவர்கள் மர்மமான முறையில் இறந்துள்ளது குறித்தும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை கடலூர் மாவட்ட அனைத்துக் கட்சிகள் வலியுறுத்தின.

  இக்கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் எம்.சேகர், பாமக மாவட்டச் செயலர் சண்.முத்துக்கிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில துணைச் செயலர் ச.திருமார்பன், மாவட்டச் செயலர் பா.தாமரைச்செல்வன், தேமுதிக மாவட்டச் செயலர் சபா.சசிக்குமார், தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி சந்திரசேகர் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியரகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  மாணவர் இறப்பு குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும், கல்வி நிறுவன உரிமையை ரத்து செய்து, அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி குரல் எழுப்பப்பட்டது.

  ஆர்ப்பாட்டத்தில் சிவக்கொழுந்து எம்.எல்.ஏ., திமுக முன்னாள் ஒன்றியச் செயலர் எம்.செல்வராஜ், ஊராட்சிமன்றத் தலைவர் சி.முத்துலிங்கம், தேமுதிக நிர்வாகி ஆர்.பாலு, தமுமுக நிர்வாகி எஸ்.மன்சூர், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு உறுப்பினர் மணிவண்ணன், பாமக மாநில நிர்வாகி பழ.தாமரைக்கண்ணன், இளைஞர் பெருமன்ற நிர்வாகி ஆர்.குமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க வட்டச் செயலர் கே.அன்புச்செல்வி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கவுன்சிலர் செந்தில், பிரகாஷ் மற்றும் கிராம மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.

  பின்னர், இக்கோரிக்கை அடங்கிய மனுவை ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரிடம் அளித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai