சுடச்சுட

  

  போக்குவரத்து பணிமனை முன் ஆர்ப்பாட்டம்: 40 பேர் கைது

  By விருத்தாசலம்,  |   Published on : 30th December 2014 03:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருத்தாசலத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கத்தினர் 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.

  புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், திங்கள்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதலே தொழிலாளர்கள் பணிக்கு வராததால் பெரும்பாலான பேருந்துகள் பணிமனைகளிலேயே நிறுத்தப்பட்டன.

  இதனைத்தொடர்ந்து, திங்கள்கிழமை காலை விருத்தாசலம் போக்குவரத்து பணிமனை 1 மற்றும் 2 முன் ஏராளமான அதிமுகவினர் திரண்டனர். பேருந்துகள் ஓடாது என ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ்களை கிழித்து எறிந்து, பேருந்துகள் இயங்கும் எனும் நோட்டீஸ்களை பேருந்துகளில் அதிமுகவினர் ஒட்டினர்.

  இதுகுறித்து, தகவலறிந்த தொமுச, பாட்டாளி தொழிற் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற் சங்கத்தினர் பணிமனை முன் திரண்டனர்.

  அதிமுகவினர் மற்றும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஒரே பகுதியில் கூடியதால் பிரச்னை ஏற்படாமல் இருப்பதற்காக மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் பி.வெங்கடேசன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

  இதனைத் தொடர்ந்து, ஊதிய உயர்வு வழங்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி பணிமனை 1-ன் முன் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை போலீஸார் கைது செய்தனர்.

  இதனைத் தொடர்ந்து அதிமுகவினர் பணிமனைகளிலிருந்து கலைந்து சென்றனர்.

  அதிமுக தொழிற் சங்கத்தினர் பேருந்துகளை இயக்கியபோதும், விருத்தாசலம் பணிமனை 1-லிருந்து இயங்கும் 67 பேருந்துகளில் 9 புறநகர் பேருந்துகள், 14 நகரப் பேருந்துகள், 2-வது பணிமனையிலுள்ள சுமார் 68 பேருந்துகளில் 10 புறநகர் பேருந்து மற்றும் 7 நகரப் பேருந்துகள் மட்டுமே இயங்கின. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai