சுடச்சுட

  

  கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் 2-வது நாளாக திங்கள்கிழமையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால், மாவட்டத்தில் போக்குவரத்து சேவை முடங்கியது. பல்வேறு இடங்களில் மறியலில் ஈடுபட்ட 232 பேர் கைது செய்யப்பட்டனர்.

  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கத்தினர் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2-வது நாளாக திங்கள்கிழமையும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களுக்கு போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது.

  கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் போக்குவரத்து பணிமனையை முற்றுகையிடுவதற்காக தொமுச பொதுச்செயலர் தங்க.ஆனந்தன் தலைமையில் சிஐடியு தலைவர் ஜி.பாஸ்கரன், சிஐடியு பொதுச்செயலர் எம்.முத்துக்குமரன், பிடிஎஸ் தலைவர் டி.ஜெய்சங்கர், ஐஎன்டியுசி பொதுச்செயலர் பி.சுவாமிநாதன் உள்ளிட்டோர் பேரணியாகச் சென்றனர்.

  அவர்களை போலீஸார் போக்குவரத்து பணிமனை முன்பு தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, போலீஸாருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், தொழிற்சங்கத்தினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.

  வடலூர் பணிமனையில் பேருந்து மீது கல் வீசியதாக ஓட்டுநர் ஒருவரை போலீஸார் கைது செய்ய முயன்றனர். அப்போது, போலீஸாருக்கும், தொழிற்சங்கத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

  இதில், மறியலில் ஈடுபட்ட 28 பேரை போலீஸார் கைது செய்தனர். விருத்தாசலத்தில் 60 பேர், பண்ருட்டியில் 19 பேர், திட்டக்குடியில் 11 பேர், நெய்வேலியில் 9 பேரும் கைது செய்யப்பட்டனர்.

  கடலூர் மாவட்டத்தில் 346 வழித்தடங்களில் 70 சதவீதம் வழித்தடத்தில் பேருந்துகள் இயக்கப்பட்டதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அதே நேரத்தில் 90 சதவீதம் பேருந்துகள் இயக்கவில்லை என தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

  மாவட்டத்தில் சீரான போக்குவரத்து சேவை அளிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் அதிகாலை முதல் ரோந்துப் பணியில் ஈடுபட்டார். மேலும், 10 வட்டாட்சியர்கள், 3 கோட்டாட்சியர்கள் கொண்ட தனிக் குழுவும் அமைக்கப்பட்டிருந்தது.

  அமைச்சர் எம்.சி.சம்பத் கடலூர் பணிமனைக்கு திங்கள்கிழமை சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, அங்கிருந்த பணியாளர்களிடம் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாதெனவும், அனைவரும் பணியில் ஈடுபட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

  ஆனாலும், கடலூர் பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்துகளைக் காண முடியவில்லை. தனியார் பேருந்துகள் பெருமளவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கூடுதல் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன.

  மேலும், பல்வேறு வழித் தடங்களில் போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. 10 பணிமனைகள் முன்பும் போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai