Enable Javscript for better performance
மாவட்டத்தில் 76% பேருந்துகள் இயங்குகின்றன:  ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    மாவட்டத்தில் 76% பேருந்துகள் இயங்குகின்றன:  ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தகவல்

    By  சிதம்பரம்,  |   Published on : 31st December 2014 01:24 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் மாவட்டத்தில் 76 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அனைத்து வழித் தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படுவதால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தெரிவித்தார்.
     ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தொ.மு.ச., சி.ஐ.டி.யு. தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட 11-சங்கங்களின் தொழிலாளர்கள் 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
     அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்களையும், ஒப்பந்தத் தொழிலாளர்களை கொண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
     சிதம்பரம் மணலூர் லால்புரத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக்கழக விழுப்புரம் பணிமனை, கடலூர் சாலையில் உள்ள கும்பகோணம் பணிமனை மற்றும் சிதம்பரம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் நேரில் சென்று பேருந்துகள் இயக்கப்படுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
     ஆய்வின் போது உதவிஆட்சியர் எம்.அரவிந்த், வட்டாட்சியர் ஜி.அன்புச்செல்வி, டிஎஸ்பி ஆர்.ராஜாராம், இன்ஸ்பெக்டர் அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் ஆகியோர் உடன் இருந்தனர்.
     பின்னர், ஆட்சியர் இதுகுறித்து செய்தியாளர்களிடையே தெரிவிக்கையில், கடலூர் மாவட்டத்தில் அரசுப் பேருந்துகள் முழுமையாக, தேவையான அளவுக்கு இயங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் அச்சமின்றி பயணிப்பதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
     ஒவ்வொரு பணிமனையிலும் போக்குவரத்துத் துறை மேலாளர் ஒருவரும், ஒரு வட்டாட்சியரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பேருந்துகளிலும், பணிமனைகளிலும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார்.
     குறைந்த அளவு
     பேருந்துகளே இயக்கம்
     இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, அரசுப் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தினால் குறிப்பிட்ட நீண்ட தொலைவு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் அனைத்து தடங்களிலும் இயக்கப்படுகின்றன. மற்ற வழித் தடங்களில் பெயரளவிற்கேதான் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
     குறிப்பாக, குக்கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம் என்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai