Enable Javscript for better performance
விபத்தில் படுகாயம்: மருத்துவமனையில் பொதுத்தேர்வு எழுதிய மாணவி - Dinamani

சுடச்சுட

    

    விபத்தில் படுகாயம்: மருத்துவமனையில் பொதுத்தேர்வு எழுதிய மாணவி

    By  கடலூர்,  |   Published on : 27th March 2014 08:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பண்ருட்டி அருகே, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குவதற்கு சற்று நேரத்துக்கு முன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த மாணவி, ஆசிரியர் உதவியுடன் மருத்துவமனையில் தேர்வெழுதினார்.
     கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வீரபெருமாநல்லூரைச் சேர்ந்தவர் அருணகிரி. விவசாயத் தொழிலாளி. இவரது மகள் பாக்கியலட்சுமி (14). பண்ருட்டியில் உள்ள சுப்பராயலு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
     புதன்கிழமை பொதுத்தேர்வு துவங்கிய நிலையில் பாக்கியலட்சுமி, உறவினருடன் பைக்கில் பண்ருட்டியில் உள்ள தேர்வு மையத்துக்குச் சென்றார். அங்குசெட்டிப்பாளையம் பகுதியில் சென்றபோது அந்த பைக்குடன், மற்றொரு பைக் மோதியது.
     இதில் பாக்கியலட்சுமி பலத்த காயமடைந்தார். பண்ருட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற அவர், மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். விபத்தில் காயமடைந்ததால் தேர்வு எழுத முடியாமல் போய்விடுமோ என்று பாக்கியலட்சுமி கவலை கொண்டார். எனினும் மனம் தளராமல், "என்னால் தேர்வு எழுத முடியும், உங்களால் உதவ முடியுமா' என செவிலியரிடம் கேட்டுள்ளார்.
     இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள், ஆட்சியர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே மாணவியின் தலைப்பகுதி ஸ்கேன் செய்யப்பட்டது. இதில் சிக்கல் ஏதும் இல்லை எனத் தெரியவந்தது. காயமடைந்த உதடு மற்றும் உடலின் பிற பகுதிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
     மருத்துவமனைக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோனிராஜ் மற்றும் கல்வித்துறை அலுவலர்கள் ரவிச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சென்று மாணவியிடம் உடல் நலம் குறித்து விசாரித்தனர். அப்போது மாணவி பாக்யலட்சுமி, என்னால் தேர்வு எழுத முடியும், எனக்கு உதவுங்கள் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.
     இதனையடுத்து, கல்வித்துறை இயக்குநர், ஆட்சியர் ஆகியோரிடம் அனுமதிபெற்று கல்வித்துறை அதிகாரிகள் மாணவி தேர்வு எழுத அனுமதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தனி அறை ஒதுக்கப்பட்டு, சிறப்பு ஆசிரியர் உதவியுடன் காலை 11.15 மணிக்கு மாணவி தேர்வு எழுதினார்.
     இதுகுறித்து மாணவி பாக்கியலட்சுமி கூறும்போது, எங்கள் வீட்டில் யாரும் படிக்கவில்லை. நான் நன்றாகப் படிக்க வேண்டும் என கடினமாக உழைத்து தேர்வுக்கு தயாரானேன்.
     ஆனால் தேர்வு மையத்துக்கு செல்லும் போது நடந்த விபத்தால் மன வேதனை அடைந்தேன். இருந்தபோதிலும் எப்படியும் தேர்வு எழுத முடியும் என்ற மனஉறுதியுடன் தேர்வு எழுதினேன். மனதளவில் பாதிப்பு இருந்தாலும் எனது குடும்பத்தின் நிலை, படிப்பின் மீது உள்ள ஆர்வம் என்னை தேர்வெழுத வைத்துள்ளது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai