Enable Javscript for better performance
அகற்றப்பட்ட சில நிமிடங்களிலேயே ஆக்கிரமிப்பைத் தொடர்ந்த கடைக்காரர்கள்!- Dinamani

சுடச்சுட

    

    அகற்றப்பட்ட சில நிமிடங்களிலேயே ஆக்கிரமிப்பைத் தொடர்ந்த கடைக்காரர்கள்!

    By கடலூர்  |   Published on : 17th April 2015 05:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை ஆக்கரமிப்பு அகற்றப்பட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் அதே இடம் ஆக்கிரமிக்கப்பட்டது.

    கடலூர் நகராட்சியின் கட்டுப்பாட்டில் திருப்பாதிரிப்புலிர் பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. ஆனால் பயணிகளுக்கான வசதிகள் என்பது சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை என புகார் கூறப்படுகிறது. குறிப்பாக பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரும் வகையில் எந்த வசதியும் செய்யப்படவில்லை. பயணிகள் நடந்து செல்வதற்கு இடம் இல்லாத வகையில் கடைகள் வைத்திருப்போர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

    இதுகுறித்து நகராட்சிக்கு ஏராளமான புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, நகராட்சியினர் போலீஸார் துணையுடன் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கடைகளின் வெளியில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகளை நகராட்சியினர் அப்புறப்படுத்தினர்.

    மேலும்  நடைபாதையின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பு செய்திருந்த சில கடைகளில்  வெளியில் வைத்திருப்பதை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிச்சென்றனர்.

    இதையடுத்து, நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த பழக்கடை மற்றும் பழச்சாறு தயாரிக்கும் பொருள்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த கடை ஊழியர்கள் நகராட்சியினர் சிறிது நகர்ந்ததும் மீண்டும் பழைய இடத்திலேயே தங்களது கடையை பரப்பினர். இதேபோன்றே நடைபாதையை ஆக்கிரமித்திருந்த பெரும்பாலான கடையினர் நகராட்சியினர் நகர்ந்த சில நிமிடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்பை தொடர்ந்தனர்.

    எனவே, ஆண்டுக்கொரு முறை என்ற அளவில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபடாமல் தொடர் கண்காணிப்பில் நகராட்சியினர் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai